×

ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்தியா ஏமாற்றம் முதல் முறையாக வங்கதேசம் சாம்பியன்

பாட்செப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்று முதல் முறையாக சாம்பியனாகி சரித்திரம் படைத்தது. தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி பாட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 5வது முறையாகவும் வங்கதேச அணி முதல் முறையாகவும் பைனலுக்கு முன்னேறின. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய யு-19 அணியில் ஜெய்ஷ்வால், சக்சேனா ஆட்டத்தை தொடங்கினர். சக்சேனா 2 ரன்னில் அவிஷேக் தாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் வழக்கம் போல் ஜெய்ஷ்வால் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருக்கு திலக்வர்மா நல்ல ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த நிலையில் திலக் வர்மா (38) ஆட்டமிழக்க, ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. ஜெய்ஷ்வால் 88 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஜூரியல் (22) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். கேப்டன் பிரியம் கார்க் 7, வீர் 0, அன்கோலிகர் 3, பிஸ்னாய் 2, மிஸ்ரா 3, கார்த்திக் தியாகி 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 47.2 ஓவரில் 177 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேச தரப்பில் அவிஷேக் தாஸ் 3, தன்ஷிம் ஹசன் சாகிப், சோரிபுல் இஸ்லாம் தலா 2, ரகிபுல்ஹசன் 1 விக்கெட் கைப்பற்றினர். 178 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்க தொடக்க வீரர் இமோன் நம்பிக்கை அளித்தார். சிறப்பாக இவர் ஆட அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த நிலையில் 9வது ஓவரை வீச வந்த சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாய் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இவர் தன்ஷித் ஹசன் (17), ஹசன் ஜாய் (8), ஹிரிடோய் (0), ஷஹாதத் ஹூசைன் (1) ஆகியோர் விக்கெட்டை சீரான இடைவெளியில் வீழ்த்தி அசத்தினார். இதனால் 65 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து வங்கதேச அணி தடுமாற்றம் கண்டது. அடுத்து வந்த ஷமிம் ஹூசேன் (1), அவிஷேக் தாஸ் (5) இருவரும் எஸ்.எஸ்.மிஸ்ரா வேகத்தில் ஆட்டமிழக்க 102 ரன்னுக்கு 6 விக்கெட் பறிபோனது. இக்கட்டான கட்டத்தில் இமோன் மீண்டும் களமிறங்கினார். இவருக்கு கேப்டன் அக்பர் அலி நல்ல ஒத்துழைப்பு தர மீண்டும் ஆட்டம் வங்கதேசம் பக்கம் திரும்பியது. அதோடு இந்திய பந்துவீச்சாளர்கள் உதிரிகளை வாரி வழங்கினர். 33 ரன்கள் உதிரிகளாக வழங்கப்பட்டதும் இந்தியாவுக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.

இமோன் 47 ரன்னில் ஜெய்ஷ்வால் பந்தில் ஆட்டமிழந்தாலும், அக்பர் அலி நங்கூரமிட்டு ஆடினார். 41 ஓவரில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. வெற்றிக்கு 15 ரன் தேவை என்ற நிலையில், அக்பர் அலி 42, ரகிபுல்ஹசன் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறிது நேர இடைவெளிக்குப் பின் ஆட்டம் தொடங்கிய போது, டக்வொர்த் விதிப்படி 170 ரன் வெற்றி இலக்காகவும், வங்கதேச அணி 30 பந்தில் 7 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றப்பட்டது. இறுதியில் வங்கதேச அணி 42.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அக்பர் அலி 43, ரகிபுல் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம், முதல் முறையாக யு-19 உலககோப்பையை வங்கதேச அணி முத்தமிட்டது. யு-19 வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி முதல் முறையாக இந்திய அணி தோல்வி கண்டது.


Tags : India ,ICC ,World Cup ,U-19 World Cup ,Bangladesh , ICC, U-19 World Cup, First Time, Bangladesh, Champion
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது