×

வள்ளலார் நினைவு நாளில் மது விற்பனை டாஸ்மாக் பாருக்கு பெண்கள் பூட்டு: பட்டாபிராமில் பரபரப்பு

ஆவடி: வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்து இருந்தும், விதிமீறி ஆவடி, அம்பத்தூர் பகுதியில் டாஸ்மாக் பார்களை திறந்து மது விற்பனை அமோகமாக நடந்தது. பட்டாபிராமில் ஒரு மது பாருக்கு பெண்கள் அமைப்பினர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மதுபான கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை விடுத்திருந்தது. இந்த உத்தரவைமீறி மது விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், பல பார்களில்  மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
குறிப்பாக கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் காலை முதல் நள்ளிரவு வரை மது விற்பனை நடைபெற்றது. இந்த பாரில் காலையில் மதுபானங்களின் விலை ஒரு மடங்கு, மதியம் இரண்டு மடங்கு, இரவு மூன்று மடங்கு அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று பட்டாபிராம் பகுதியில் உள்ள 6 டாஸ்மாக் பார்களில் அதிகாலையில் இருந்தே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து, சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்க தலைவி கலைசெல்வி வந்து பார்களை மூடுமாறு உரிமையாளர்களிடம் கூறினர். இதனை அடுத்து, 5 பார்களை உரிமையாளர்கள் மூடிவிட்டு சென்றனர். ஆனால், பட்டாபிராம் போலீஸ் நிலையம் எதிரே இருந்த ஒரு பார் மட்டும் மூடாமல் தொடர்ந்து மதுபான விற்பனை நடந்தது. இதனையடுத்து, அவர் அந்த பாரின் கேட்டை மூடி பூட்டு போட்டார். அதன் சாவியை பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், அவர் மதுவிற்பனை செய்த பார் மீது நடவடிக்கை எடுக்கமாறு புகார் கொடுத்து விட்டு சென்றார். மேலும்,  பூட்டியதால் பாரில் இருந்து வெளியே வரமுடியாமல் குடிமகன்கள் தவித்தனர். இதன் பிறகு, பூட்டிய பூட்டை உடைத்து விட்டு பாரில் இருந்து வெளியே வந்தனர். இதுகுறித்து சமூக  கூறுகையில், ‘‘டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்ய மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நேரம் நிர்ணயிக்கப்பட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் பல இடங்களில் விடுமுறை நாளில் 24 மணிநேரம் மதுபானம் விற்பனை செய்கின்றனர். எனவே டாஸ்மாக் பார்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tasmac ,Buttapram Vallalar Memorial , Vallalar Memorial, Wine Sales, Tasmac
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...