×

ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணியை 5 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: பழமையான ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணியை 5 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் உள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், நூற்றாண்டு பழமையான கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழக பொதுப்பணி துறையில் பாரம்பரிய கட்டிட பாதுகாப்பு கோட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோவை கவர்னர் பங்களா, குதிரை வண்டி கோர்ட், வடசென்னை சார்பதிவாளர், மின்ட் அரசு அச்சகம், புதுக்கோட்டை நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டிடங்களை பழமை மாறாமல் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே, கடந்த 1770ம் ஆண்டு இந்தோசெரானிக் கட்டமைப்பில் கட்டப்பட்ட ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணி ரூ.34 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருந்து மலைசுண்ணாம்பு கல் மற்றும் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட மணல், முட்டை, கடுக்காய், பனைவெல்லம் போன்றவற்றை அரைத்து தயாரித்து கான்கிரீட், மற்றும் மேற்கூரை மற்றும் சுவர்களில் பூச்சுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது நடந்து வரும் இப்பணிகளை சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் நாகராஜன், நிதித்துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தொழில்துறை சிறப்பு செயலாளர் அருண் ராய், அனுஜார்ஜ் உட்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பாரம்பரிய கட்டிட  புனரமைப்பு பணிகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறது, அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது இப்பணிகளில் உள்ள நுணுக்கங்கள் குறித்து கட்டிட கலை நிபுனர் பரமசிவம், இணை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் அவர்களுக்கு விளக்கினார்கள். மேலும், அவர்கள், பழமையான முறையில் மாடுகளை கொண்டு சுண்ணாம்பு கலவை அரைக்கும் பணியை பார்த்து வியந்தனர். தொடர்ந்து அவர்கள் கொதிகலன் இயக்க கட்டிடத்தை நேரில் பார்வையிட்டனர். நூற்றாண்டு கட்டிட புனரமைப்பு பணி என்பதால் அது குறித்து தெரிந்து கொள்ள இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் வந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : IAS officers ,Humayun Mahal , Humayun Mahal, reconstruction work,IAS Officers
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்...