×

சிஏஏவுக்கு எதிராக கையெழுத்திட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிஏஏவுக்கு எதிராக கையெழுத்திட்டோர் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது. இது குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு இவற்று க்கு எதிராக  தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நாள்தோறும் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது. நேரடி பாஜ பிரதிநிதி போலவே செயல்படும் அமைச்சர் ஒருவர், “திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு ஏன் தடை செய்யாமல் இருக்கிறது?” என்று வயிற்றெரிச்சலில் பேசியிருக்கிறார். மத்திய பாஜ அரசில், முன்னாள் மாண்புமிகுவாக இருந்து மக்களிடம் தோல்வி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், “திமுக கட்டாய கையெழுத்து இயக்கம் நடத்துகிறது” என்று பேசியிருக்கிறார்.கட்டாயமாக கையெழுத்து வாங்குவது, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த ஓய்வுபெற்ற நீதிபதிக்கு கட்டாயமாக பாஜ உறுப்பினர் அட்டையை கொடுப்பது, மிஸ்டுகால்களை நம்பியே உறுப்பினர் எண்ணிக்கை பற்றி உறக்கத்தில் மனக்கணக்கு போடுவது என செயல்படுகிறவர்களுக்கு, திமுக மற்றும் தோழமை கட்சிகளும் மேற்கொண்ட கையெழுத்து இயக்கமும், அதற்கு மக்கள் காட்டிய  வரவேற்பும் ஆர்வமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, இப்படித்தான் புலம்பி ஒப்பாரி வைத்திட  செய்திருக்கிறது.

 கொளத்தூர் தொகுதியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பை பெற்ற நான், சிஏஏவுக்கு எதிராக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்தை பெறும் இயக்கம் நடைபெறுகிறது என்பதை மக்களிடம் சொன்னேன். எதற்காக இந்த இயக்கம் என்பதை விளக்கிய பிறகே மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட வருகிற நிலையில், முந்தைய நாட்களைவிட கூடுதலான முனைப்புடன் செயல்பட்டு, ஒரு கோடி கையெழுத்து என்ற இலக்கையும் கடந்து, பெரும் எண்ணிக்கையில் கையெழுத்துகள் பதிவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.  சென்னையைச் சேர்ந்த அறிவு என்ற  ஆர்வம் மிகுந்த இளைஞர், தனது ‘தெருக்குரல்’ எனும் வாரம் ஒருநாள் நடைபெறும் நிகழ்வு மூலம் ‘சண்டை செய்வோம்’ என்ற  தனிமனித   “ ராப்” பாடல் மூலமாக,  தன்னுடைய எதிர்ப்பை மக்கள் கூடும் இடங்களில்  திரளாகப் பதிவு செய்து இருந்தார். அவரை அறிவாலயத்திற்கு அழைத்து பாராட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஓராண்டு “முரசொலி “ மலரை நினைவுப் பரிசாக வழங்கினேன். அப்போது, இளைஞர் அறிவு, சிஏஏவுக்கு எதிரான தனது கையொப்பத்தைப் பதிவு செய்தார். நாளுக்கு நாள் மக்களின் ஆதரவுடன் வளர்ந்த கையெழுத்து இயக்கத்தின் ஐந்தாம் நாளன்று (பிப்.6) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திரளான மக்கள் பங்கேற்புடன் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இறுதி நாளில் (பிப்.8) திருவள்ளூர் காமராஜர் சாலையில் சிஏஏவுக்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெறும் பணியில் ஈடுபட்டபோது, “ஒரு  கோடி பேரிடம் கையெழுத்துப் பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பணியை தொடங்கினோம். மக்களே முன்வந்து ஆதரவு தந்ததால் தற்போதைய கணக்கின்படி 2 கோடி கையெழுத்தை தாண்டிவிட்டது.” என மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். 2 கோடியை தாண்டியுள்ள கையெழுத்து பிரதியை இந்திய குடியரசுத் தலைவரிடம் அளிக்க இருக்கிறோம். அதன் பிறகும், மத்திய அரசு இதுபற்றிப்  பரிசீலிக்க தவறினால், அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம். மக்களுக்கு எதிரான, நாட்டை மதரீதியாக துண்டாடும் சிஏஏ உள்ளிட்டவற்றை எதிர்த்து திமுகவின் போராட்டம் தொடரும். மக்களின் ஆதரவுடன், மக்களுக்கு எதிரான எதையும் முறியடித்து, மக்களின் நலன் காப்பதற்குத் தொடர்ந்து பாடுபடுவோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : signatories ,CAA ,MLA ,President ,Stalin , signatories,CAA, President ,Stalin
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்