×

ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாராயணசாமி பேட்டி

மீனம்பாக்கம்: புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் வரும் 12ம் தேதி நடக்க இருக்கிறது. அந்த கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக  தீர்மானம் நிறைவேற்ற இருக்கிறோம். மத்திய அரசின் இந்த சட்டங்கள் மக்களுக்கு எதிராக இருப்பதால்  அதில் எங்கள் எதிர்ப்பை காட்டவேண்டிய அவசியம் இருக்கிறது.
இதற்காக புதுச்சேரி அரசு மீது மத்திய  அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதற்காக எந்த எதிர்ப்பு வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள் மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. அரசு பதவி உயர்வுகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது 40 வருடங்களாக நடைபெறும் போராட்டம். நான் மத்திய இணையமைச்சராக இருந்த போது ஆதிதிராவிடர் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது, பாஜக அதை எதிர்த்தது. பாராளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினாலும்  தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட மலைவாழ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார பிரச்சனை.  உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். ஆனாலும் இதை மறு ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.  தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க  பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Adivasis ,Supreme Court , Reservation, Aborigines, Narayanasamy, Interview
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...