×

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்திலேயே சிறப்பு சட்டமாக இயற்ற வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள்

சென்னை: டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்ததற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இதனை இந்த பட்ஜெட் கூட்டத்திலேயே சிறப்பு சட்டமாக இயற்ற வேண்டும் என்று வலியுத்தியுள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்கிறேன். காவிரி டெல்டாவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், அவற்றை முறியடிக்கும் வகையில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இந்த அறிவிப்பின் மூலம் காவிரி பாசன மாவட்ட உழவர்களின் எதிர்காலம் இனி ஒளிமயமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.

டி.டி.வி.தினகரன் (அமமுக பொது செயலாளர்): மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற  திட்டங்களுக்கு எதிராக போராடியவர்களையும், விவசாயிகளையும் முந்தாநாள் வரை  விரட்டி விரட்டி வழக்குகள் பதிந்து கைது செய்து வந்த பழனிசாமி அரசு. இப்போதாவது மக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்து ‘காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே  நேரத்தில் வழக்கம் போல இதுவெறும் அறிவிப்போடு நின்று விடாமல் முறையான  சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும். மேலும் விவசாயிகளையும், பொதுமக்களையும்  பாதிக்கிற எட்டு வழிச்சாலை திட்டம், நியூட்ரினோ ஆய்வகம் போன்றவற்றையும்  தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ள  வேண்டும்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): தமிழக காவிரி டெல்டா பகுதியை  பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக  அறிவித்திருக்கும் முதல்வர்  எடப்பாடி பழனிசாமிக்கு தமாகா சார்பில் பாராட்டுக்களையும்,  வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அது மட்டுமல்ல  அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தால் டெல்டா  பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம்  சிறக்கும், உயரும், வளரும்.

சரத்குமார் (சமக தலைவர்): டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விவசாய தொழில் லாபகரமானதாகவும், தமிழகத்தில் பசுமை புரட்சி மேலோங்கி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு அடித்தலமாகவும் இந்த அறிவிப்பு அமையும். தமிழகத்தில் வளம் கொழித்து, வளர்ச்சி சிறக்கும் விதமாக, விவசாயிகள் மனமகிழ்ந்து கொண்டாடும் இந்த அறிவிப்பு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): காவிரி  டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற தமிழக  முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும், இது  வெறும் அறிவிப்பாக மட்டும் நின்றுவிடாமல், தமிழக முதல்வர் அறிவித்தபடி  சிறப்பு சட்டம் கொண்டுவர தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்கான சிறப்பு சட்டத்தை தமிழக  அரசு இயற்ற வேண்டும். மேலும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக அறிவிக்கக் கோரி அதற்காக தன்னலமற்று போராடிய அனைவருக்கும் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன்.

Tags : session ,budget session ,Protected Agriculture Zone , Protected Agriculture ,notification, Political party leaders ,request
× RELATED விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற...