×

தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு 10 ஆயிரம் கோடி கடன் வழங்க ஒப்புதல்: ஆசிய வங்கியுடன் விரைவில் ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் ₹10 ஆயிரம் கோடி கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழகத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்கள் உலக வங்கி, நபார்டு, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ₹17,942 கோடி காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்படுத்தவும், ₹2,400 கோடி செலவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டம், ரூ.6175 கோடியில் சென்னையில் சுற்றுவட்ட சாலை இரண்டாவது, மூன்றாவது கட்டமும், சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியிடம் கடனுதவி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அதிகாரிகளும் டெல்லி சென்று அந்த அறிக்கை தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருந்தனர். அதன்பேரில் இந்த திட்டத்துக்கு, அந்த கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி துணை தலைவர் டி.ஜெ.பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டின் காவிரி பாசன கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டம் உட்பட 4 பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து தொடர்பாக விரிவாக ஆலோசனை நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கடனுதவி அளிப்பது தொடர்பாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் நடப்பாண்டில் இந்த திட்டத்துக்கு ₹10 ஆயிரம் கோடி விடுவிக்கப்படுகிறது. இதைதொடர்ந்து தமிழக அரசு சார்பிலும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி சார்பில் ஓரிரு நாளில் ஒப்பந்தம் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து இந்த 4 திட்டப்பணிகளையும் டெண்டர் விடப்பட்டு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



Tags : Tamil Nadu ,Asian Bank , 4 major, projects, Tamil Nadu,Agreement ,Asian Bank
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...