×

கேரளாவில் சிக்கியவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை ஐஎஸ் புதிய சாப்ட்வேர் உருவாக்கத்தில் செய்யது அலிக்கு முக்கிய பங்கு: தென்காசி அழைத்து செல்ல முடிவு

நாகர்கோவில்:  ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு புதிய சாப்ட்வேர் உருவாக்கியதில், கேரளாவில் பிடிபட்ட செய்யது அலி முக்கிய பங்கு வகித்துள்ளது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் வில்சன் (57), சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு, கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தது உள்பட பல்வேறு உதவிகளை செய்ததாக , திருவனந்தபுரம் தெற்றியோடு, புன்னைக்காட்டுவிளை பகுதியை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் செய்யது அலியை (26), போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாகர்கோவில் நேசமணிநகர் காவல் நிலையத்தில் நடக்கும் இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை செய்யது அலி,  வாக்குமூலமாக கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.குறிப்பாக, தவுபிக், அப்துல் சமீம் ஆகியோர் தன்னை அடிக்கடி சந்தித்து பேசியது பற்றி தெரிவித்துள்ள செய்யது அலி,  தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற அமைப்புக்கு பணம் சேகரித்து வழங்கியதிலும் தனக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து கூறி உள்ளார். மேலும் டெல்லியில் கைதாகி உள்ள காஜா மொய்தீன் தலைமையில் ஐ.எஸ். அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு தாக்குதல் திட்டங்களை நடத்த திட்டமிட்டு  ஆலோசனை கூட்டம் நடத்தி வந்ததும், 15 பேர் வரை இந்த திட்டத்துக்காக தயார்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் தங்களது இயக்கத்தை வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறி உள்ள செய்யது அலி, கம்ப்யூட்டரில் தனக்கு தெரிந்த பல்வேறு நுணுக்கங்கள் பற்றி தெரிவிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ளவர்களை தொடர்பு கொள்ள இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் புதிய சாப்ட்வேர் உருவாக்கி உள்ளனர். அந்த சாப்ட்வேர் உருவாக்கியதில் செய்யது அலியின் பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. தேசிய புலனாய்வு உள்ளிட்ட எந்த உளவுப்பிரிவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, மிக ரகசியமாக வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேசி வந்துள்ளனர். மேலும் சமீபத்தில், தமிழக போலீசாருக்கு, தமிழில் ஆன்லைன் மூலம் மிரட்டல் வந்தது. இதன் பின்னணியிலும் செய்யது அலி செயல்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது பற்றியும் செய்யது அலியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தமிழக போலீசார் மட்டுமின்றி, என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர். ெபங்களூர், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைதானவர்களுடன் உள்ள தொடர்புகள் குறித்தும் விசாரணை நடக்கிறது.செய்யது அலியிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையே செய்யது அலிக்கு, தென்காசியில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரை தென்காசிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ளனர். இதற்கிடையே ஏற்கனவே சிறையில் உள்ள அப்துல் சமீம், தவுபிக் இருவருக்கும் நீதிமன்ற காவல் வருகிற 14ம் தேதி முடிகிறது. அதற்கு முன் அவர்கள் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணைக்காக அழைத்து செல்லலாம் என கூறப்படுகிறது.

Tags : NIA ,Tenkasi , NIA officials,Kerala,Decision , Tenkasi
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...