×

கடலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றங்களில் 1,718 வழக்குகள் தீர்வு

கடலூர்: கடலூர் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 1,718 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10.37 கோடி நிவாரணம் வழங்கிட உத்தரவிடப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூரிலுள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான கோவிந்தராஜன் திலகவதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அந்தந்த நீதிமன்றத்தின் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள் என மொத்தம், 13,964 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 1,718 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலமாக சமரச தீர்வாக ரூ.10.37 கோடிக்கு நிவாரணம் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடலூரில் நடைபெற்ற முகாமில், மக்கள் நீதிமன்ற நீதிபதி கே.அய்யப்பன்பிள்ளை, மாவட்ட நீதிபதிகள் எஸ்.மகாலட்சுமி, எ.திருவேங்கடசீனிவாசன், எம்.மூர்த்தி, சார்பு நீதிபதி ஆர்.பிரபாவதி உள்பட அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான கே.ஜோதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags : courts ,Cuddalore district , Cuddalore, People's Court, cases, settlement
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...