×

செண்பகராமன்புதூரில் குடிமகன்களின் பாராக மாறிய படிப்பகம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆரல்வாய்மொழி: செண்பகராமன்புதூர் சமத்துவபுரத்தில் நூறு வீடுகள் உள்ளன. ேமலும் இங்கு சமுதாய நலக்கூடம், படிப்பகம், கிராம வனக்குழு அலுவலகம், நியாயவிலைக்கடை ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளன. இந்த நிலையில் படிப்பகம் தினமும் காலையில் திறக்கப்படுகிறது. ஆனால் பின்புறம் உள்ள கிராம வனக்குழு அலுவலகம் அடிக்கடி திறக்கப்படுவதில்லை. இதனால் மது பிரியர்கள் இதனை சாதகமாக பயன்படுத்தி படிப்பகம், வன அலுவலகத்திற்கு இடப்பட்ட காலி இடத்தை பாராக பயன்படுத்துகின்றனர். இரவு சுமார் 7 மணியளவில் இருந்து இந்த இடம் சிறிய பாராக மாறத்தொடங்குகிறது. சில நேரங்களில் மது பிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சில நேரங்களில் கைகலப்பு ஏற்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. ஞாயற்றுக்கிழமைகளில் இந்த இடத்தில் காலையில் இருந்தே மது பிரியர்கள் மது அருந்த தொடங்கி விடுகின்றனர்.

இதனால் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. சிலர் இதை தட்டி கேட்டால் மது பிரியர்கள் தகாத வார்த்தைகள் பேசி மிரட்டவும் செய்கின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு பலமுறை தகவல்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை, இப்பகுதியில் போலீசார்  ரோந்து பணியிலும் ஈடுபடுவதில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் மது அருந்துவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடிக்கடி ரோந்து பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags : Bar ,Citizens , Senpakaramanpudur, study, action, demand
× RELATED பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு