×

கேரளாவுக்கு அதிகரிக்கும் ரேஷன் அரிசி கடத்தல்: கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கும் அதிகாரிகள்

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மவுனம் சாதிக்கின்றனர். தமிழகத்தில்  கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் எல்லை பகுதிகளான க.க.சாவடி,  ஆனைமலை, வேலந்தாவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு  தினமும் இருசக்கர வாகனம் மற்றும் கார், வேன், லாரி உள்ளிட்ட நான்கு சக்கர  வாகனங்களில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக, வேலந்தாவளம், ஆனைமலை, செம்பனாம்பதி, வழுக்குப்பாறை, பிச்சனூர்,  திருமலையாம்பாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்கள் வழியாக ரேஷன் அரிசி  கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. கோவை புறநகர் மற்றும்  மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் பலர், தமிழக அரசின் 20 கிலோ ரேஷன் அரிசியை  வாங்குவதில்லை. இதனை அடையாளம் காணும் புரோக்கர்கள், குறிப்பிட்ட ரேஷன்  கடைக்கு சென்று, விற்பனையாளர்களிடம் கிலோவுக்கு ரூ.2 முதல் 3 வரை செலுத்தி,  மூட்டை, மூட்டையாக வாங்கிச்செல்கின்றனர். இதற்காகவே ஒரு கும்பல்  செயல்படுகிறது.

இவ்வாறாக வாங்கும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட  இடத்தில் மறைமுகமாக ரேஷன் அரிசியை பதுக்கி, லாரி லாரியாக கேரளாவுக்கு  கடத்துகின்றனர். இதற்காக, தென்மாவட்டங்களில் இருந்து, லாரியுடன் ஆட்களை  வரவழைக்கின்றனர். இவர்களுக்கு உதவியாக, உள்ளூர் ஆட்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடத்தல்  கும்பலுக்கு உணவு, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு அறையில் 4  பேர் முதல் 5 பேர் வரை தங்குகின்றனர். பல நேரங்களில் இவர்களிடம் இருசக்கர  வாகனத்தை கொடுத்து, அதன் மூலமாகவும் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு  கடத்துகின்றனர். ஒவ்வொரு இடங்களிலும் செக்போஸ்ட்களில் தங்களுக்கு  வேண்டப்பட்ட அலுவலர்கள் இருக்கிறார்களா? என கண்காணித்து, அதற்கு ஏற்ப இந்த  கடத்தல் தொடர்கிறது. கடத்தல் கும்பலில் மொத்தம் 50 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், மாதம் ரூ.20 ஆயிரம் முதல்  ரூ.25 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். விற்பனையாளர்களை நன்றாக  கவனித்து, ரேஷன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை வாங்கி வரும்  புரோக்கர்கள், மாதம்தோறும் பல லட்சத்தை புரட்டுகின்றனர். செக்போஸ்ட்  போலீசாருக்கு ஒவ்வொரு முறையும் தலா ரூ.300 சம்திங் கொடுக்கப்படுகிறது.  அவ்வப்போது செலவுக்கு பணம் கிைடப்பதால் அவர்களும் இதை கண்டுகொள்வதில்லை.  இதையெல்லாம் தாண்டி, மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிவில்  சப்ளை துறையை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தும்போது,  விசுவாசமாக செயல்படும் சில போலீசார், கடத்தல் கும்பலுக்கு மொபைல் போனில்  தகவல் கொடுத்து, காப்பாற்றி விடுகின்றனர். இந்த டீலிங் தொடர்வதால், அரிசி  கடத்தலை தடுக்க முடியவில்லை.

இதையும் மீறி, சில நேரங்களில்  கடத்தல் கும்பலின் அஜாக்கிரதை காரணமாக, அதிகாரிகளின் ரெய்டில்  சிக்கிக்கொள்கின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மதுக்கரை சோதனைச்சாவடியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த வழியாக வந்த லாரியை  மடக்கி சோதனை செய்தனர். அதில், 10 டன் ரேஷன் அரிசி இருந்தது. இவை,  கேரளாவுக்கு கடத்தி செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், 10  டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு,
4 பேர் கைது செய்யப்பட்டனர். நடப்பாண்டில்,  கடந்த ஜனவரி 23ம் தேதி ஆனைகட்டி பகுதியில் காரில் சுமார் 600  கிலோ ரேஷன் அரிசியை கடத்திச்சென்ற 2 பேரை உணவு கடத்தல் பிரிவு போலீசார்  கைது செய்தனர். அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கோவை  பூசாரிபாளையத்தில் உள்ள எப்.சி.ஐ. குடோனில் இருந்து ரேஷன் அரிசி  கடத்தப்பட்டது தெரியவந்தது.

இவ்வாறு அரிசி பறிமுதல்  செய்யப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டாலும், கடத்தல் தொடர் கதையாக உள்ளது.  இதற்கு காரணம், ரேஷன் ஊழியர்கள், போலீசார் மற்றும் புரோக்கர்கள் அமைத்துள்ள பலமான கூட்டணி. இந்த கூட்டணியில் அடிக்கடி பணம் கைமாறுவதால், கடத்தலை யாராலும் தடுக்க முடியாத நிலை உள்ளது. ரேஷன் அரிசி போலவே பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களும் ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்படுகிறது. புரோக்கர்களுடன் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் கைகோர்த்து செயல்படுவதால், அவர்கள் தனி ராஜாங்கம் நடத்தி வருகின்றனர். கேரளா  மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள  வியாபாரிகள் சிலர், இந்த கடத்தல் ரேஷன் அரிசியை போட்டி போட்டு  வாங்கிச்செல்கின்றனர். கடத்தல்காரர்களிடம் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை  வாங்கி, அவற்றை பட்டை தீட்டி வெளிமார்க்கெட்டில் கிலோ 40-45 ரூபாய்க்கு  விற்று விடுகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் மாபியா நெட்வொர்க்  இருப்பதால், இதை தடுக்க முடியாமல் சில நேர்மையான அதிகாரிகள் திணறுகின்றனர். இது குறித்து  கோவை மாவட்ட சிவில் சப்ளை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’கோவை  மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் 100 சதவீதம் கட்டுக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூர், பல்லடம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்துதான் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அதையும்  தடுக்க நடவடிக்கை ேமற்கொண்டு வருகிறோம்’’ என்றனர். தமிழக உணவு  கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’கடத்தல்,  ரேஷன் கடைகளில் இருந்தே துவங்குகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபடுபவர்களை  கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமே இதனை முற்றிலும் தடுக்க  முடியும். கடத்தல்காரர்களுக்கு துணை போனதாக காவல்துறையில் ஏற்கனவே 5  போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பலர் கண்காணிக்கப்பட்டு  வருகின்றனர்.  வேலந்தாவளம், ஆனைமலை, பிச்சனூர், மதுக்கரை உள்ளிட்ட இடங்களில்  வாகன சோதனை தொடர்கிறது.’’ என்றார்.  கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘’கோவையில்  இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்தி செல்லும்போது, சோதனைச்சாவடிகளில்  போலீசாரிடம் மாமூல் கொடுத்துவிட்டு எளிதாக தப்பி விடுகின்றனர். உணவு  கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏதேனும் ஒரு முறைதான் சோதனையில்  ஈடுபடுகிறார்கள். இதை, கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்திக்கொள்கின்றனர். அப்படியே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்  சோதனை செய்தாலும், எளிதாக மோப்பம் பிடித்து, மாற்று வழியில்  தப்பிவிடுகின்றனர். கடத்தல்காரர்களிடம் லட்சக்கணக்கில் பணம் புரள்கிறது.  உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி சோதனை நடத்துவதுடன்,  பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்’’ என்றார்.

* 127 பேர் கைது
கோவை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’கோவை  மாவட்டத்தில், கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை ரேஷன் அரிசி கடத்தல்  சம்பந்தமாக 235 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 127 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். 26 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  நான்கு சக்கர வாகனங்கள்-6, மூன்றுசக்கர வாகனம்-1, இருசக்கர வாகனம் 57 என  மொத்தம் 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை எல்லையில் 10க்கும்  மேற்பட்ட ரேஷன் அரிசி கடத்தல் வழித்தடங்கள் கண்டறியப்பட்டு தீவிர சோதனை  நடத்தப்படுகிறது’’ என்றார்.

* அரிசி வாங்காமலேயே எஸ்.எம்.எஸ்.
ரேஷன் கடைகள் டிஜிட்டல் மயமான பிறகு, கார்டுதாரர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கிய உடனேயே அவர்களது மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடும். ஆனால், பல ரேஷன் கார்டுதாரர்கள், அரிசி வாங்காமலேயே அவர்கள் அரிசி வாங்கியதாக, மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்து விடுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளரிடம் கேட்டால், சர்வர் கோளாறு காரணமாக சில நேரம் இப்படி வரும்... கண்டுக்காதீங்க... என பதிலளிக்கின்றனர்.

* மாவாகும் ரேஷன் அரிசி....!
இலவசமாக  வழங்கப்படும் ரேஷன் அரிசியை, இருமுறை வேக வைத்தால் மட்டுமே சாதமாக மாறும்.  இந்த அரிசியை, பெரும்பாலானோர் சமைப்பதற்கு பதில், மாவுக்கு  பயன்படுத்துகின்றனர். இந்த இலவச அரிசி, ரேஷன் விற்பனையாளர்களுக்கு வருமானம்  தருவதாக மாறியுள்ளது. அரவை ஆலையில் பட்டை தீட்டப்பட்டு,  வெளிமார்க்கெட்டில் நல்ல அரிசியாக விற்பதுடன், மாவாகவும் கூடுதல் விலைக்கு  விற்கின்றனர்.

Tags : Kerala ,Kerala: Silent Officers , Kerala, ration rice, smuggling
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு