×

6 ஆண்டுகளாக மின்வசதி இல்லாமல் தவிக்கும் கிராமம்: மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலம்

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே ஆறு ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவலம் தொடர்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சிக்கதாசம்பாளையம் கிராமம். இங்குள்ள எட்டாவது வார்டில் இந்திரா நகர் குடியிருப்புகள் உள்ளது. இங்கு மொத்தம் 72  குடியிருப்புகள் உள்ளன. இங்கு குடியிருக்கக்கூடிய பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். இவர்கள், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊராட்சிக்கு வீட்டுவரி செலுத்தி வருகின்றனர். மேலும், இங்குள்ள மக்களுக்கு மாவட்ட வருவாய் துறை மூலமாக குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தெரு குழாய்கள் அமைத்து உள்ளாட்சி அமைப்பு மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இங்குள்ள வீடுகளுக்கு கடந்த 6 ஆண்டுகளாக மின்சார வசதி மட்டும் வழங்காமல், மின்வாரிய அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இது குறித்து, இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மின்சார வசதி இல்லாத காரணத்தால், தாங்கள் மிகவும் சிரமப்பட்டு இங்கு வசிக்கிறோம், இரவு நேரங்களில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் இருப்பதால் அன்றாடம் உயிருக்கு பயந்தபடியே வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது என இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை உள்ளது எனவும் கவலை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில், பெரும்பாலான வீடுகளில் மெழுகுவர்த்தி மற்றும் மண் எண்ணெய் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு சில வீடுகளில் சோலார் லைட், டார்ச் லைட் உபயோகப்படுத்தி, தங்களுடைய அன்றாட வாழ்க்கையை கழிக்கின்றனர்.

மாணவர்கள் வீதியில் அமர்ந்து, மெழுகுவர்த்தி மற்றும் டார்ச் லைட் உதவியுடன் பாடம் படிக்கும் நிலை உள்ளது. தங்களது இந்த அவலநிலையை போக்கி, விரைவாக மின்சாரம் வழங்க வேண்டும் என இங்குள்ள மக்கள் கோரிக்கை விடுகின்றனர். இது பற்றி இக்கிராம மக்கள் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து விட்டது, வளர்ச்சி அடைந்து விட்டது. வல்லரசு ஆகப்போகிறது என அரசியல் தலைவர்கள் அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஆனால், நாங்கள், 70 ஆண்டுகால இந்திய சுதந்திர வரலாற்றில், மின் இணைப்பு இல்லாமல் குடும்பம் நடத்த வேண்டிய பரிதாப நிலை உள்ளது. நாங்கள் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்துவிட்டு, இது, புறம்போக்கு  பகுதி, வண்டி வழித்தடம், நத்தம் புறம்போக்கு, பள்ளம் புறம்போக்கு என ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிக்கிறார்கள்.

பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படிப்பதற்கு மெழுகுவத்தி வெளிச்சத்திலும் தலையில் டார்ச் லைட் கட்டி பாடப்புத்தகங்களை படித்து வருகிறார்கள். எங்களுடைய நிலைமையை அதிகாரிகள் தெரிந்தும் பாராமுகமாக இருப்பது வேதனை அளிக்கிறது. எங்களது குழந்தைகளின் படிப்புக்காக விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கூறினர். வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளையும், சுற்று வட்டார காலனிகளையும் ஆய்வு செய்து வருகிறோம். படிப்படியாக அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும்’’ என்றனர்.


Tags : Village , Power, village, candle illumination
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...