×

எஸ்.எஸ்.ஐ. கொலையில் மூளையாக செயல்பட்டவர் ஐ.எஸ். அமைப்புடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு: போலீசிடம் செய்யது அலி தகவல்

நாகர்கோவில்: ஐஎஸ் அமைப்புடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்று போலீசாரின் விசாரணையில் செய்யது அலி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (57) சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் அப்துல்சமீம், தவுபிக் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான கம்ப்யூட்டர் இன்ஜினியர் செய்யது அலியை நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அருகே கைது செய்தனர். அவரை நாகர்கோவிலில் நேசமணிநகர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவனந்தபுரம் அருகே தெற்றியோடு, புன்னைக்காட்டுவிளையை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் செய்யது அலி(26). இவர், அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.  திடீரென்று செய்யது அலி தலைமறைவானார். தமிழக, கேரள போலீசார் செய்யது அலியை தேடி விதுரை பகுதியில் உள்ள அவரது மனைவி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியிருந்தனர். செய்யது அலி மற்றும் அப்துல்சமீம், தவுபிக் ஆகியோருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7ம் தேதி கியூ பிரிவு போலீசார் செய்யது அலியை அவரது வீட்டில் சென்று பிடித்து விசாரணை நடத்தினர்.  மறுநாளே அவர் தலைமறைவானார். விதுரையில் மனைவி வீட்டில் வசித்து வந்த இவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

மனைவியிடம் நடத்திய விசாரணையில் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை நடந்த அன்று முழுவதும் அவர் விதுரையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சம்பவம் நடைபெறுவதற்கு முன்னரும் இவர்கள் நெய்யாற்றின்கரையில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். கொலை நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் செய்யது அலியை காண வீட்டிற்கு வந்திருந்தனர் என்பதை அவரது தாயாரும் கூறியிருந்தார். தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற அமைப்புக்கு வியாபாரிகளிடம் இருந்து பணம் சேகரித்து வழங்கியதாகவும் இதில் செய்யது அலிக்கு தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ‘ஐஎஸ் அமைப்பின் பணிகளைத்தான் நாங்கள் செய்து வருகிறோம். காஜாமைதீன் எங்கள் தலைவர். அவருக்கு ஐஎஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு உண்டு. அவர் வழியாக வருகின்ற தகவல்களை எங்களுக்கு தெரிவிப்பார்.

அதற்காக கூட்டம் போட்டு அதனை செயல்படுத்துவோம். பெங்களூருவில் வைத்து கூட்டம் நடத்துவோம். கூட்டத்திற்கு 15 பேர் வரை வருகை தருவர். எங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே தலைவர்கள் உண்டு. அதனை போன்று தமிழகம் முழுவதும் எங்களுக்கு ஆட்கள் உள்ளனர். போலீசார் எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு செய்துவந்ததால் அதற்கான எதிர்ப்பை தெரிவிக்கவே எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொன்றோம்’ என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனிப்படை போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். மேலும், என்ஐஏ அதிகாரிகளும் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : murder ,Ali ,organization ,Esesai , Esesai Murder, IS. Organization, Doing Ali
× RELATED வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டி...