×

எல்லா தேர்வையும் ரத்து செய்துவிட்டால் மாணவர்களின் திறனை கண்டறிவது எப்படி?.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

கோவை: அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் மாணவர்களின் திறனை எப்படி கண்டறிவது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலத்தில் கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கவுள்ளது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குண்டான பணிகளை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. அதில் நடைபெற்றுள்ள தவறினை அறிவதற்கு அந்த அமைப்பு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று காவல் துறைக்கு புகார் செய்து, காவல் துறையும் விசாரணை மேற்கொண்டு, தவறில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். அவருக்கு சுமார் 70 வயதாகின்றது. அவர், அணிந்திருந்த செருப்புக்கும் காலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட குச்சியை குனிந்து எடுக்க முடியவில்லை, அதனால், அருகாமையில் இருந்த சிறுவனை அழைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கின்றார், அதை அவர் தெளிவாகத் தெரிவித்ததுடன் அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார்.அந்த சிறுவன் என்னுடைய பேரன்போல் இருக்கின்றார். உதவிக்குத் தான் அழைத்தேன் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால், இதனை ஊடகங்கள் பெரிதுபடுத்துவது வேதனை அளிக்கின்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு என்று எனக்குத் தெரியவில்லை. அவர் பக்திமான். அது நன்றாகத் தெரியும். அவர், அவருடைய சொந்தக் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அது, அ.தி.மு.க.வின் கருத்தல்ல என்பதையும் மீன்வளத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

பள்ளி கல்வித்துறையில் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படிச் செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். தேர்வு வைத்தால்தான், அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும். பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார். இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை எவரும் தெரிவிக்கவில்லை. இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Tags : Efficiency of students, Chief Edapadi Palanisamy
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!