×

நெய்வேலியில் பாஜ எதிர்ப்பு எதிரொலி: நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்புக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்தது. இதில், நடிகர் விஜய் பங்கேற்று நடித்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்.எல்.சி. 2வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.  கடந்த 5ம் தேதி விஜய் படப்பிடிப்பில் இருந்தபோது, வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் சம்மன் அளித்தனர். அப்போது பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தில் நடந்த சோதனை சம்பந்தமாக உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி சென்னைக்கு அழைத்து சென்றனர். இந்த சோதனைக்கு பின்னர் நேற்று முன்தினம் மீண்டும்  படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டார்.

அப்போது, என்.எல்.சி. சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் சுரங்க நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதையடுத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படை மற்றும் மந்தாரக்குப்பம் போலீசார் இருதரப்பினரிடமும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். எனினும், பாஜகவினர், படப்பிடிப்பு நடைபெறும் என்.எல்.சி. சுரங்கம் முன் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து இருந்தனர். இதனால், படப்பிடிப்பு நடக்கும் வளாகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதன்பின், வழக்கம்போல் நேற்று காலை ஷூட்டிங் தொடங்கியது. நடிகர் விஜய் சென்னையில் இருந்து காரில் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவரது சம்பந்தப்பட்ட காட்சிகள் எந்தவித அசம்பாவிதங்கள் ஏதுமின்றி படமாக்கப்பட்டது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுரங்க நுழைவு வாயில் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : Vijay ,Neyveli ,shooting , Neyveli, anti-BJP, actor Vijay. Additional police protection
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...