×

தினகரன், விஐடி இணைந்து பிளஸ்2 மாணவர்களுக்காக நடத்தியது வேலூரில் ‘வெற்றி நமதே’ பிரமாண்ட நிகழ்ச்சி: ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர்

வேலூர்: தினகரன் நாளிதழ், விஐடி இணைந்து, வேலூரில் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்திய ‘ெவற்றி நமதே’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் திரண்டனர். தினகரன் நாளிதழ் வேலூர் பதிப்பும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்காக வழிகாட்டும் ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியை கடந்த 2015 முதல் நடத்தி வருகிறது. அதன்படி, 6வது ஆண்டாக ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி விஐடி பல்கலைக்கழக அண்ணா ஏசி அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் கலந்து கொள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அதிகாலை முதலே தங்கள் பெற்றோர்களுடன் வேலூருக்கு வந்தனர்.

மாணவர்களை ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சி நடைபெறும் விஐடி பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்து வருவதற்காக 3 இடங்களில் இருந்து இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலம் மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அண்ணா அரங்கம், சி.எஸ். அரங்கம் என 2 அரங்கங்களும் நிரம்பி வழிந்தன. அதன்பிறகு வந்த மாணவர்கள் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலின் கீழ் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எல்இடி திரை மூலம் வெற்றி நமதே நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் மிகவும் அனுபவமிக்க பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதும் முறை, சரியான வினாக்களை தேர்வு செய்து எழுதுவது உட்பட தேர்வில் வெற்றிபெறுவதற்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் கணித பாடம் குறித்து ஆசிரியை செல்வலட்சுமி மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். ஆங்கில தேர்வை எளிதில் அணுகுவது எப்படி என்று செங்கோட்டையன் கருத்துரை வழங்கினார். இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்து ஸ்ரீபிரியா விளக்கினார். வேதியியல் பாடத்தில் சுலபமாக மதிப்பெண்கள் பெறுவது குறித்து பத்மலோசனி விளக்கினார். உயிரியல் பாடத்தில் உயரிய மதிப்பெண்களை ஈட்டுவது தொடர்பாக ஆதியப்பன் விளக்கமளித்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் மீண்டும் இலவச பஸ்கள் மூலம் வேலூருக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். முடிவில் வேலூர் தினகரன் பொதுமேலாளர் வீரராகவ கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கவிஞர் இலக்குமிபதி தொகுத்து வழங்கினார்.

Tags : Plus Two ,VIT ,Vellore ,event ,Dinakaran ,Veema Namade , DINAKARAN, VIT, VITAMIN NAMADE
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…