×

புழல் சிறை காவலர் குடியிருப்பில் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை

புழல்: புழல் சிறை காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய சிறைச்சாலை அருகில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குடியிருப்பு வளாகத்தில் உள்ள பாழடைந்த மருத்துவ அலுவலர்கள் குடியிருப்பின் பின்புறம் உள்ள மரத்தில் காவலர் சீருடையில் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்குவது தெரிந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் வேலூர் சிறைச்சாலையில் தலைமை காவலராக பணியாற்றி வந்த பாவாடைராயன் (43) என தெரிந்தது. இவருக்கு திருமணமாகி சுசீலா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பாவாடைராயனின் மகள் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த பாவாடைராயன் துக்கம் தாங்க முடியாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புழல் சுடுகாட்டில் உள்ள மகள் சமாதிக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து பாவாடைராயனை காப்பாற்றி உள்ளனர். பிறகு, மது போதைக்கு அடிமையான பாவாடைராயன் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறைச்சாலை காவலர் குடியிருப்பு வளாகத்தில் சிறை தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Suicide ,jail house , Pulp, imprisonment, execution, suicide
× RELATED இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை