×

தனியார் பள்ளியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி

பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நேற்று மாலை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்த பாலா (37), பிரதீப், கார்த்தி, ஜெகன் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 15 அடி ஆழம் கொண்ட கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து கழிவுநீர் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சகதிகளை அகற்றுவதற்காக 4 பேரும் அந்த தொட்டிக்குள் இறங்கினர். முதலில் பாலா இறங்கி அடியில் உள்ள சகதிகளை கிளறும்போது விஷவாயு தாக்கி மயங்கி  விழுந்தார். இதனை கண்டதும் மற்ற மூன்று பேரும்  அவசரகதியில் மேலே வந்து விட்டனர்.

இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி, மயங்கி கிடந்த பாலாவை மீட்டு மேலே கொண்டுவந்து முதலுதவி அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். தகவலறிந்து வந்த திருவேற்காடு போலீசார், பாலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பு  உபகரணங்கள் இல்லாமல் கழிவு நீர் தொட்டிக்குள் தொழிலாளிகளை இறக்கிய விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : private school Worker ,poison gas attack ,private school , Private school, poison gas, worker kills
× RELATED நடைமேம்பாலத்தை சீரமைக்கும்போது தவறி...