×

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத காவலருக்கு ஓய்வூதிய பலன் வழங்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காத காவலருக்கு ஓய்வூதிய பலனை வழங்க ரயில்வே நிர்வாகத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பத்தூரை சேர்ந்த எஸ்.ராதாதேவி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் சுப்பிரமணி ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவருக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2010ல் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தேன். அதில் ஜீவனாம்சமும் கோரியிருந்தேன். வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரது ஓய்வூதிய பலன்களை ரயில்வே பாதுகாப்பு படை நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவரது ஓய்வூதிய பலன்களிலிருந்து ரூ8 லட்சமும், மாதம் ரூ3 ஆயிரம் ஜீவனாம்சமும் தர சம்மந்தம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால், அதன்படி ஜீவனாம்சம் தரவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எனது கணவரின் ஓய்வூதிய பலனில் இருந்து  எனக்கு ரூ8 லட்சத்தை தரக்கோரி ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பாதுகாப்பு ஆணையரிடம் மனு கொடுத்தேன். பணத்தை என்னிடம் தருமாறு நீதிமன்றம் குறிப்பிட்டு உத்தரவிடவில்லை என்று ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பாதுகாப்பு ஆணையர் பதில் அளித்தார்.

ரயில்வே பாதுகாப்பு படை நிர்வாகம் நடவடிக்கையால் எனக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே, நீதிமன்றத்தில் நடந்த முடிவின் அடிப்படையில் எனக்கு சேரவேண்டிய ரூ8 லட்சத்தை தரும்வரை எனது கணவரிடம் ஓய்வூதிய பலன்களை தருவதற்கு ரயில்வே பாதுகாப்பு படை நிர்வாகத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பாதுகாப்பு ஆணையர் மற்றும் மனுதாரரின் கணவர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார். அதுவரை மனுதாரரின் கணவருக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க ரயில்வே பாதுகாப்பு படை மண்டல பாதுகாப்பு  ஆணையருக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : High Court , Alimony, pension benefits, interim ban
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...