×

தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் ஆசிரியர்களின் சர்டிபிகேட் கேட்கக்கூடாது

* ஏஐசிடிஇ விதிகளில் மாற்றம்
* சான்றிதழ் பெறுவது தொடரும்:அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் கருத்து

சென்னை: தனியார் கல்லூரிகளை பொறுத்தவரை பணியில் சேரும் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் குறிப்பிட்ட நபரை ஆசிரியராக சேர்த்துக்கொள்ளப்படுகிறார். சென்னை அருகே அரசுக்கல்லூரியில் வேலை கிடைத்தும் தனியார் கல்லூரியிலிருந்து அசல் சான்றிதழ்களை பெற முடியாததால் வசந்தவாணன் என்ற ஆசிரியர் தற்கொலை செய்துகொண்டார். 2018ம் ஆண்டு எந்த கலை, அறிவியல் கல்வி நிறுவனமும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை வைத்திருக்கக்கூடாது என்று பல்கலைக்கழக மானிய குழு யுஜிசி உத்தரவிட்டது. இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை பெற்று வைத்திருக்கக்கூடாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சில தினங்களுக்கு முன் வெளியிட்ட கல்லூரி அங்கீகாரத்துக்கான கையேட்டில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நடைமுறையில் இது சாத்தியமா என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லும் நம் நாட்டை சேர்ந்தவர்களின் பாஸ்போர்ட்டை வேலை பார்க்கும் நிறுவனத்தினர் வாங்கி வைத்துக்கொள்வார்கள். குறிப்பிட்ட நபர் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், என்பதற்காக அத்தகைய நடைமுறை அவர்கள் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது. அதுபோல, தமிழகத்தில் தனியார் கல்லூரிகளில் வேலைக்கு சேருபவர்களின் சான்றிதழ்களை பெற்று வைத்துக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட நபர் இதனால் வேறு எங்கும் வேலைக்கோ, மேற்படிப்புக்கோ செல்ல முடியாது. நம் நாட்டில் குறிப்பாக தென்னிந்தியாவில் ஏராளமான இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் படித்துவிட்டு வேலைக் கிடைக்காமல் ஏராளமான இன்ஜினியரிங் பட்டதாரிகள் உள்ளனர்.

அதனால் சான்றிதழ்களை கொடுத்தாவது தனியார் கல்லூரிகளில் வேலைக்கு சேர பட்டதாரிகள் தயாராகவே உள்ளனர். இந்நிலையில் குறிப்பிட்ட அறிவிப்பால் பெரிய அளவில் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. வேலைக்கு சேர்பவர்களிடம் சான்றிதழ்களை பெறுவது தொடரவே செய்யும். ஆனால் விதியை மீறியதாக யாராவது புகார் தெரிவித்தால் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூறினர்.

Tags : Private Engineering Colleges ,Teachers , Private Engineering College, Certificate
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...