×

மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்ப்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு அமைச்சர் ஆய்வு: மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு

சென்னை: மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது குறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 23800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ராயலா நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் நேற்று  மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி  ஆணையர் பிரகாஷ்,  தலைமை வகித்தார்.

இந்த மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் வளசரவாக்கம் மண்டலம், ராயலா நகர் 2வது பிரதான சாலையில் 10,000 சதுர அடி கொண்ட இந்நிலத்தில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 லட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் முறையே பூவகைகள் அரளி, ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லி, முல்லை, பவளமல்லி, பாரிஜாதம், இட்லி பூ, நந்தியா வட்டம், அலமோண்டா, மூலிகை வகைகள் கற்பூரவல்லி, பெரண்டை, தூதுவளை, துளசி, இன்சுலின், மரவகைகள் குண்டு மணி, பூங்கை, நாவல், கொடுக்காபுளி, வேம்பு, இலுப்பை, மருதம், பூவரசு, நாகலிங்கம், பாதாம், பப்பாளி, பின்னை, மந்தாரை, சிறுநெல்லி, செம்மரம், சில்வர்வுட், வில்வம், தான்றிக்காய், செண்பகம், மகிழம், மலைவேம்பு, புளியமரம், மருதாணி, விளாமரம், குடை மரம், கொய்யா, வெள்ளை எருக்கம், பலா மற்றும் தேக்கு போன்ற வகைகள் அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்,சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மியாவாக்கி முறை செயல்படுத்தப் படவுள்ளது. இவ்வாறாக உருவாக்கப்படும் நகர்புற காடுகளினால் நகர்புற மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மாசு குறைக்கப்பட்டு காற்றின் தூய்மை மேம்படுத்தும் சூழ்நிலை உருவாகும். மேலும் நகரங்களில் அழிந்து வரும் அரிய வகை  பறவை இனங்கள் மற்றும் பூச்சி இனங்கள் விருத்தியடையக்கூடிய நிலை உருவாகும். இந்த ஆய்வின் போது தெற்கு வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஷ், மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) பாலசுப்பிரமணியம், வளசரவாக்கம் மண்டல அலுவலர் சசிகலா, செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர் மற்றும் ட்ரீஸ் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Municipal Commissioner ,Miyawaki , Urban forestry, timber, ministerial inspection
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...