×

ஆக்கிரமிப்பில் உள்ள புறம்போக்கு நிலங்களை மீட்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்படுமா?...தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனிப்பிரிவை ஏன் துவங்கக் கூடாது என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதித்து கடந்த 2018 ஜனவரி 25ம் தேதி கோவை சார்பு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் கோவை 3வது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிராக வாதங்களைவைக்க தன்னையும் இணைக்க கோரி அதே பகுதியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சுப்பையாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பையா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மச்சிநாயக்கன்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கை, அரசு வழக்கறிஞர் முறையாக நடத்தவில்லை. வழக்கை நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் அறிவுறுத்தவில்லை. வழக்கின் மீது எந்த அக்கறையையும் அரசுத்தரப்பில் காட்டவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞருக்கு எதிராக தமிழ்நாடு பார்கவுன்சிலில் புகார் கொடுத்தேன். சிவில் வழக்கு, மற்றும் வாய்தா தொடர்பாக விசாரணை நடத்த முடியாது என்று பார்கவுன்சில் தெரிவித்துவிட்டது.

எனவே, எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு அபராதம் விதித்து உத்தரவிட்ட கோவை 3வது கூடுதல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, அரசு வழக்கறிஞர், ஆக்கிரமிப்பாளருடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, கோவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு வழங்க தடை விதிக்கப்படுகிறது. அரசு நிலங்கள், அரசு புறம் போக்கு நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கு அதற்கான நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் செல்வாக்கு, பணபலம், ஆள்பலம் ஆகியவற்றுடன் அரசு அதிகாரிகள் துணையுடன் அரசி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அரசு நிலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கானவை. அவற்றை காக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், வருவாய் துறை செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிடப்படுகிறது. இந்த 3 துறை செயலாளர்களும் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தரவேண்டும். தமிழகம் முழுவதும், மாவட்ட வாரியாக எத்தனை ஏக்கர் அரசு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன? அதில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது?
இந்த நிலங்களை மீட்க தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை? அதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அதில் எத்தனை வழக்குகளில் அரசுத்தரப்பு முறையாக வழக்கை நடத்தவில்லை?

வழக்குகளை முறையாக நடத்தாத அரசுத்தரப்பு வழக்கறிஞர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? அதேபோல, தமிழகம் முழுவதும் அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுப்பதற்காக தனி பிரிவை ஏன் துவங்கக் கூடாது? அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசின் இணைய தளத்தில் ஏன் பதிவேற்றம் செய்யக்கூடாது? அரசு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்த நிலங்கள் குறித்த விவரங்கள் அனைத்து மாவட்ட பதிவுத்துறைக்கு ஏன் வழங்கக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பி, அவற்றுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : division ,lands ,land , Extraordinary Land, Separate Division, Government of Tamil Nadu, High Court
× RELATED கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின்...