×

போராடி தோற்றது இந்தியா ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஆக்லாந்து: இந்திய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 22 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. நியூசி. தொடக்க வீரர்கள் கப்தில், நிகோல்ஸ் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 16.4 ஓவரில் 93 ரன் சேர்த்தனர். நிகோல்ஸ் 41 ரன் எடுத்து வெளியேறினார். கப்தில் - பிளண்டெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தது. பிளண்டெல் 22 ரன் எடுத்து தாகூர் வேகத்தில் சைனி வசம் பிடிபட்டார். அதிரடியாக விளையாடிய கப்தில் 79 ரன் (79 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் லாதம் 7, நீஷம் 3, கிராண்ட்ஹோம் 5, சாப்மேன் 1, சவுத்தீ 3 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுக்க, நியூசிலாந்து 41.3 ஓவரில் 197 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணி 26 ரன்னுக்கு 5 விக்கெட் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஸ் டெய்லருடன் இணைந்த அறிமுக வீரர் கைல் ஜேமிசன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்க உதவினார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன் குவித்தது. டெய்லர் 73 ரன் (74 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஜேமிசன் 25 ரன்னுடன் (24 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் சாஹல் 3, தாகூர் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அகர்வால் 3 ரன், பிரித்வி ஷா 24 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் விராத் 15 ரன்னில் வெளியேற, ராகுல் 4, கேதார் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் 52 ரன்னில் வெளியேறினார் (57 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்). தாகூர் 18 ரன் எடுத்தார்.

இந்தியா 31.1 ஓவரில் 153 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஜடேஜா - சைனி ஜோடி கடுமையாகப் போராடி 76 ரன் சேர்த்தது. சைனி 45 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். சாஹல் 10 ரன், ஜடேஜா 55 ரன் (73 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 48.3 ஓவரில் 251 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசி. பந்துவீச்சில் பென்னட், சவுத்தீ, ஜேமிசன், கிராண்ட்ஹோம் தலா 2 விக்கெட், நீஷம் 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசி. அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்ததுடன் தொடரையும் கைப்பற்றி, டி20 தொடரில் அடைந்த ஒயிட் வாஷ் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அறிமுக வீரர் ஜேமிசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசி. 2-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் பிப். 11ம் தேதி நடக்கிறது.


Tags : New Zealand ,ODI ,India , India, New Zealand
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்