×

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தம்படி தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும்: ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளிக்க வேண்டும். தமிழர்களின் நீண்ட நாள் விருப்பமான சம உரிமை, நீதி, மரியாதை கிடைக்க வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்,’ என இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இலங்கை அதிபராக கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இருந்தவர் மகிந்தா ராஜபக்சே. இவரது ஆட்சி காலத்தில்தான் விடுதலைப்புலிகள் உடனான போர் முடிவுக்கு வந்தது. இலங்கையில் சீனா அதிகளவில் முதலீடுகள் செய்தது. இவர் கடந்த நவம்பர் மாதம் இலங்கை பிரதமரானார். அதன்பின், முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று முன்தினம் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

ஜனாதிபதி மாளிகையில் ராஜபக்சேவுக்கு நேற்று காலை அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராஜபக்சேவை சந்தித்து பேசினார். பின்னர், ராஜபக்சே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ராணுவ உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்தன. இலங்கை தமிழர் விவகாரம் குறித்தும் அவர்கள் விரிவாக பேசினர். இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்னை பற்றி இருவரும் திறந்த மனதுடன் விவாதித்தோம். சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டநாள் விருப்பத்தை இலங்கை அரசு பூர்த்தி செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளிப்பதற்கான அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.

மேலும், தமிழர்களுக்கான மறுசீரமைப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றியும் நாங்கள் பேசினோம். மீன்பிடிப்பு விவகாரம் இருநாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கிறது. அதனால், இந்த விஷயத்தில் ஆக்கப்பூர்வமான மற்றும் மனிதாபிமான முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளோம். நமது பிராந்தியத்தில் தீவிரவாதம் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை இரு நாடுகளும் தீவிரமாக எதிர்த்து போராடி வருகின்றன. இலங்கையில் கடந்தாண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மிகுந்த வேதனை அளித்தது. இந்த தாக்குதல், இலங்கைக்கு விழுந்த அடி மட்டும் அல்ல, மனிதநேயத்துக்கு விழுந்த அடி. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் விவாதித்தோம். இவ்வாறு மோடி கூறினார்.

கடந்த 1987ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப்பின், இலங்கை அரசியல் சாசனத்தில் 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வழி வகுக்கிறது. இதை அமல்படுத்தும்படி இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டியில், ‘‘இந்தியா எங்களுக்கு மிகவும் நெருங்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் உள்ள நெருங்கிய வரலாற்று தொடர்புகள், இரு நாட்டு உறவுகள் இடையே வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது,’’ என்றார். இந்தியாவில் 5 நாள் சுற்றுப்பயணம் ேமற்கொள்ளும் ராஜபக்சே, வாரணாசி, சாரநாத், புத்தகயா மற்றும் திருப்பதி போன்ற புனித தலங்களுக்கும் செல்கிறார்.

Tags : Modi ,Tamils ,Rajapakse , Sri Lankan politics, power sharing, Rajapaksa, Prime Minister Modi
× RELATED தமிழர்களிடம் அடைக்கலம் தேடி பிரதமர்...