×

வழக்கு தொடரும் முன்பாக சமரச தீர்வை கட்டாயமாக்க சட்டம் இயற்ற வேண்டும்: தலைமை நீதிபதி பாப்டே பேச்சு

புதுடெல்லி: ‘வழக்கு தொடர்வதற்கு முன்பாக சமரசத் தீர்வு காண்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்றுவதற்கான காலம் கனிந்துள்ளது,’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளார். டெல்லியில் ‘உலகமயமாக்கல் காலத்தில் சமரசம்’ என்ற தலைப்பில் நேற்று  சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவில் அமைப்பு ரீதியான சமரசங்களை ஏற்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் ‘சமரச கவுன்சில்’ அமைக்கப்படுவது மிகவும் முக்கியம். சர்வதேச வர்த்தகத்தின் உலக கட்டமைப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் எழும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை காண்பதில் நடுவர் மன்றங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

உலக சமுதாயம், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த, ஒருங்கிணைந்த உறுப்பினர் என்ற வகையில் இந்தியாவின் பங்களிப்பும் இதில் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது, எல்லை தாண்டிய வர்த்தகங்களில் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாகி இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில், வழக்குகள் நீதிமன்றத்துக்கு செல்லும் முன்பாக அவற்றுக்கு வெளியில் சமரச தீர்வு காண்பதை கட்டாயமாக்கும் வகையில் விரிவான சட்டங்களை இயற்ற வேண்டும், அதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. இதன் மூலம், நீதிமன்றத்துக்கும், பாதிக்–்கப்படும் தனிநபர்கள், அமைப்புகளுக்கும் ஏற்படும் கால விரயம் தவிர்க்கப்படும். இது, எல்லா தரப்புக்கும் பலன் அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : proceedings ,Chief Justice Bapte Proceedings ,Chief Justice , Act to compromise, Chief Justice Bapte
× RELATED அவதூறான கருத்துக்களை பரப்பி...