×

ஐடி துறையில் பணிபுரிந்து இறந்தவர்களின் பெயரில் போலி அடையாள அட்டையில் ரூ53 லட்சம் நூதன மோசடி: தெலங்கானாவில் 6 பேர் கைது

திருமலை: தெலங்கானா மாநிலம், சைபராபாத் காவல்துறை ஆணையாளர் சஜனார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த பனிசவுத்ரி(33), செரூப்நாத் சவுத்ரி(44), ஸ்ரீனிவாசராவ்(33), ஹரிஷ்(25), வேணுகோபால்(35), வீர சேகரராவ்(28) ஆகிய 6 பேரும் ஐடி துறையில் பணிபுரிய கூடியவர்களில் விபத்தில் இறப்பவர்களின் செய்தியை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து, சமூக வலைத்தளங்களில் அவர்களின் தகவல்களை அறிந்து போலி சிம்கார்டு பெற்று,  வங்கிகளில் கடனும், கிரெடிட் கார்டும் பெற்று ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தனியார் வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட ஒரு புகாரில், பாலப்பர்த்தி ரகுராம் என்பவர் ரூ2 லட்சத்து 76 ஆயிரம் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று, ஏமாற்றியவரை காணவில்லை எனவும், அவரை கண்டுபிடித்து பணத்தை பெற்று தரவேண்டும் என்றும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குண்டூரை சேர்ந்த இந்த 6 பேர் கொண்ட கும்பல் ஐதராபாத் குட்கட்பல்லியில் இருந்தபடி  செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து  விபத்தில் இறந்தவர்கள் பட்டியலை தயார் செய்து, அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் அவர்களின் விவரங்களை சேகரித்து போலி ஆவணங்களை தயார் செய்து,  சிம் கார்டுகளை பெற்று, வங்கிகளில் கடன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் பெற்று ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அவ்வாறு கடந்த 2019 செப்டம்பர் மாதம் 15ம் தேதி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ரேப்பாக்குலா விஷ்ணுகுமார் என்பவரின் ஆவணங்களை தயார் செய்து, சிம்கார்டு பெற்று தனியார் வங்கியில் ரூ2 லட்சத்து 13 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர்.

இதேபோல் பல்வேறு தனியார் வங்கிகளில் மொத்தம் ரூ12 லட்சத்து 66 ஆயிரம் கடனாகவும், ரூ5 லட்சத்து 48 ஆயிரம் கிரெடிட் கார்ட் மூலமும் பெற்றுள்ளனர். இதேபோன்று நல்கொண்டாவை சேர்ந்த அவகாஷ் மகாந்தா ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்,  கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி விபத்தில் உயிரிழந்தார். இவரது பெயரிலும் போலி ஆவணங்கள் மூலம் ரூ5 லட்சத்து 54 ஆயிரத்து 88 கடன் பெற்றுள்ளதுடன், அவரது வங்கி கணக்கில் இருந்த ₹36 ஆயிரத்து 605 பணத்தையும் எடுத்துள்ளனர். இதேபோன்று பாலபர்த்தி ரகுராம் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில்  2019ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த இந்த கும்பல் ரகுராமன் செல்போன் எண்ணைப் பெறுவதற்காக மருத்துவமனை ஊழியர்களிடம் அவரின் உறவினர்கள் என்று கூறி ரகுராமின் மனைவியின் மூலமாக அவர் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை பெற்று போலி ஆவணங்களை தயார் செய்து ரூ12 லட்சத்து 64 ஆயிரம் ஏமாற்றி உள்ளனர்.

இதேபோன்று பெகா சிஸ்டம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அபிஷேக் ஆனந்த் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி கார் விபத்தில் இறந்தார். அவரது போலி ஆவணங்களை தயார் செய்து தனியார் வங்கிகளில் ரூ14 லட்சத்து 76 ஆயிரம், ரூ7 லட்சம் கடனாக பெற்றுள்ளனர். இந்த பணத்தை எடுப்பதற்காக விசாகப்பட்டினத்தில் வங்கி கணக்கு தொடங்கி ரூ24 லட்சத்து 9 ஆயிரத்து 542 பணத்தை செலுத்தி எடுத்துள்ளனர். அடுத்த கட்டமாக பெங்களூரை சேர்ந்த நாகண்ணா என்பவரின் போலி ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற முயன்ற நிலையில் போலீசார் இந்த கும்பலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து ரூ53 லட்சத்து 93 ஆயிரத்து 43 பணம், ஒரு கார், போலி அடையாள அட்டைகள், 100 செல்போன்கள், 6 சிம்கார்டுகள்,  போலி அடையாள அட்டைகளை தயார் செய்வதற்காக பயன்படுத்தக் கூடிய கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வங்கிகள் தற்போது கடன் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குவதில் எந்த வித விசாரணையும், கள ஆய்வு மேற்கொள்ளாமல் ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பெற்று அவரவர் சம்பளத்திற்கு ஏற்ப கடன்களை வாரி வழங்கி வருகின்றன. பொதுமக்களும்  தங்களுக்கு உண்டான தகவல்களை ரகசியமாக வைக்க வேண்டுமே தவிர, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Telangana ,IT department , ID department, fake ID card, new fraud
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...