×

பிம்பிளிக்கி பிளாப்பி... என்கிட்ட பைசா இல்லே... லண்டன் கோர்ட்டில் அனில் அம்பானி கைவிரிப்பு

லண்டன்: அம்பானி என்றாலே பல ஆயிரம்கோடி சொத்துக்களை கொண்டவர்கள் என்று கேள்விப்பட்ட நிலையில், இப்போதுள்ள அனில் அம்பானி பெரும் கடனாளியாக இருப்பதும், தன்னிடம் ஒன்றும் இல்ைல என்று லண்டன் நீதிமன்றத்தில் கைவிரித்திருப்பதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தவர் அனில் அம்பானி. ஆனால், இப்போது அவரது நிலைமை தலைகீழாக உள்ளது. உலகம் முழுவதும் பல நிறுவனங்களிடம் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல், தவித்து வருகிறார். அம்பானி சகோதரர்களில் பெரியவரான முகேஷ் அம்பானியின் நிறுவனங்கள் தொடர்ந்து லாபத்துக்கு மேல் லாபத்தை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிர்ஷ்டக்கட்டையாக இருக்கும் அனில் அம்பானியின் நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்துக்கு மேல் நஷ்டத்தை சந்தித்து மீள முடியாமல் கிடக்கின்றன.

கடந்த ஆண்டில், அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனம், எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ700 கோடியை செலுத்த வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும் என உச்ச நீதிமன்ற கெடு விதித்தது. இதனால் வேறு வழியின்றி அவரது அண்ணன் முகேஷ் ரூ458.77 கோடி ரூபாயை தம்பிக்கு அளித்து அவரை காப்பாற்றினார். தற்போது மீண்டும் அனில் அம்பானி ஒரு கடன் பிரச்னையில் சிக்கி உள்ளார். ஆர் காம் நிறுவனம் சீன வங்கிகளிடம் வாங்கிய ₹6,500 கோடியை உடனடியாக அவரிடம் இருந்து வசூலித்து தர வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், அடுத்த ஆறு வாரத்தில் ₹710 கோடியை சீன வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆனால், அனில் அம்பானி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘‘அனில் அம்பானி நிறுவனங்களின் முதலீடு மதிப்பு பெருமளவில் சரிந்துவிட்டது. நிகர மதிப்பு பூஜ்யமாகி விட்டது. புதிதாக பணத்தை திரட்ட சொத்துக்கள் கூட இல்லை’’ என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, ‘‘அனில் அம்பானி மிகப்பெரிய பாரம்பரியத்தை சேர்ந்தவர். அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து கேட்டு வாங்கி ₹710 கோடியை செலுத்த வேண்டும். எரிக்சன் நிறுவன விவகாரத்தில் இப்படித்தானே பணம் செலுத்தப்பட்டது?’’ என்று கூறியுள்ளார். இவ்வளவு பெரிய கடனாளிக்குத்தான் மத்திய அரசு ரபேல் போர் விமானங்களை ஒன்றிணைக்கும் பணியை, புதிய நிறுவனத்தை தொடங்கிய ஒரே வாரத்தில் தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Anil Ambani ,London Court , London Court, Anil Ambani, Repeal
× RELATED பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி;...