×

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீத் மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போனது: புதிய மனு தாக்கல் செய்து குழப்பம்

லாகூர்: மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபிஸ் சயீத் மீதான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவது, அவன் தாக்கல் செய்த புதிய மனுவால் தள்ளிப் போயுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு.  கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் நிதி அளித்து வந்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, இவனது தலைக்கு ரூ.71 கோடி வெகுமதி அறிவித்தது.

இந்நிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக ஹபிஸ் சயீத் மீது, பாகிஸ்தானின் பஞ்சாப் காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு 23 வழக்குகள் பதிவு செய்தது. ஹபீஸ் சயீத் கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 2 வழக்குகளில் விசாரணை முடிந்ததால், அதன் தீர்ப்பை லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்ற(ஏடிசி) நீதிபதி அர்ஷத் உசேன் புட்டா கடந்த வாரம் ஒத்தி வைத்திருந்தார். இந்நிலையில், ஹபிஸ் சயீத் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக, தன் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து, அவற்றின் மீதான விசாரணைகள் முடிந்தபின் தீர்ப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தான். இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹபிஸ் சயீத் மனுவுக்கு அரசு  பதில் அளிக்கும்படி நேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தது. இதனால், ஹபிஸ் மீதான வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படுவது தள்ளிப் போயுள்ளது.

பாகிஸ்தானை நெருங்கும் கெடு
லஷ்கர் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதை பாகிஸ்தான் தடுக்க தவறியதால், அந்த நாட்டை கருப்பு பட்டியலுக்கு முந்தைய சாம்பல் நிற பட்டியலில் வைக்க, பிரான்சை சேர்ந்த நிதி நவடடிக்கை குழு கடந்தாண்டு அக்டோபர் முடிவு செய்தது. இந்த பட்டியலில் இருந்து வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பாகிஸ்தான் நீக்கப்படவில்லை என்றால், அது கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். பின்பு, ஈரான் போல் பொருளாதார தடைகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Tags : Hafiz Saeed ,attack ,Habiz Saeed on Judgment ,Mumbai , Mumbai attack, Hafiz Saeed, new petition filed
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது