×

ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் பெற்று புற்றீசல்போல் செயல்படும் தனியார் சட்டக்கல்லூரிகள்

* கல்லூரிக்கு வராமலேயே ஆயிரக்கணக்கானோர் வக்கீல்களாக மாற்றம்
* தமிழக அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?

திருமலை: ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் பெற்று புற்றீசல்போல் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிகள், கல்லூரிக்கு வராமலேயே ஆயிரக்கணக்கானோரை வக்கீல்களாக உருவாக்கி வரும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, கடப்பா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி உட்பட பல்வேறு நகரங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த சட்ட கல்லூரிகளில் படிப்பதற்கு ஆந்திராவை சேர்ந்தவர்களை காட்டிலும் அதிக அளவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கல்லூரிக்கு வராமலேயே சட்ட படிப்பு முடித்ததற்கான சான்று கிடைத்துவிடுவது தான். மூன்று  மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் கல்லூரிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டால் போதுமானது என்பதால் பல்வேறு வேலைகளில் உள்ளவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சட்டம் படித்ததற்கான எல்எல்பி டிகிரி போட்டுக் கொள்வதற்கும் நீதிமன்றங்களில் நடைபெறக்கூடிய வழக்குகளை கண்காணிப்பதற்காகவும் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் சிலருக்கு  அடியாட்களாக உள்ளவர்கள் இந்த தனியார் சட்டக் கல்லூரிகளை அதிக அளவில் நாடுகின்றனர். இதனால் நேர்மையாக சட்டம் படித்து நீதிமன்றத்தில் வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்களுக்கும், குறுக்குவழியில் கல்லூரிக்கு செல்லாமல் பட்டம் பெற்று வழக்கறிஞர்களாக உள்ளவர்களுக்கும் உரிய கவுரவமும் மரியாதையும் இல்லாமல் போவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால் இதுபோன்ற போலி வழக்கறிஞர்கள் தங்களுக்கு தெரிந்த பார் அசோசியேஷன் மூலமாக உயர்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள பார் அசோசியேசனில் உறுப்பினராக சேர்ந்து விடுகின்றனர்.  மேலும் இந்த சட்டக் கல்லூரிகளுக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த சில அரசியல்வாதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் தொடர்பு இருப்பதால் இதுகுறித்து பரவலாக அனைவருக்கும் தெரிந்தும் இதுபோன்ற போலி வழக்கறிஞர்களை உருவாக்கி வரக்கூடிய கல்லூரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அவ்வாறு கடப்பா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் சட்டக்கல்லூரி எல்எல்பி படிப்பதற்காக 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு ரயில்வேயில் பணிபுரிந்த விபின் என்பவருக்கு எல்எல்பி படித்ததற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை சட்ட கல்லூரியில் படித்ததாக தெரிவித்துள்ள நிலையில் விபின் தெற்கு ரயில்வேயில் கடந்த 2017  மே மாதம் வரை பணியில் இருந்துள்ளார். 80 சதவீதம் வருகை பதிவு இருப்பதாக தனியார் சட்ட கல்லூரி தெரிவித்து வந்த நிலையில் விபின் பெற்ற சட்டபடிப்பிற்கான சான்றிதழ் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி முதல்வர்  ஹிமவந்த் குமார் மற்றும் விபுனுக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர்கள் உலகநாதன் மற்றும் மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.  இதேபோன்று ஆந்திராவில் பல இடங்களில் புற்றீசல் போல் செயல்பட்டு வரக்கூடிய தனியார் சட்டக் கல்லூரிகளில் இருந்து ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான போலி வழக்கறிஞர்களை உருவாகி வரக்கூடிய சட்டக்கல்லூரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டு   நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நேர்மையான முறையில் சட்டம் படித்து வரக்கூடிய வழக்கறிஞர்களுக்கு மத்தியில் இதுபோன்ற போலி வழக்கறிஞர்கள் உருவாவதை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில்  ஈடுபடக் கூடியவர்கள் பணம் கொடுத்தால் சட்டப்படிப்புக்கான சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நம்பிக்கைகள் குறைந்துள்ள நிலையில் இதுபோன்ற செயல்களை தடுத்து நீதிமன்றத்தின் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நன்மதிப்பை பெறும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Andhra Pradesh , Received millions of money, Andhra Pradesh , Private law
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி