×

அப்படி போடு...போடு... ஆட்டம் தாங்கல...!

தமிழக காவல்துறையில், தென்மாவட்டங்களில் இருந்து, மேற்கு மண்டல மாவட்டங்களுக்கு இடமாறுதலாகி வருவது என்பது குதிரைக்கொம்பு. மீறி டிரான்ஸ்பர் கேட்டு வரவேண்டுமென்றால், அவரவர் ரேங்கிற்கு தகுந்த மாதிரி ₹3 லட்சம் முதல் 7 லட்சம் வரை மேலிடத்துக்கு கப்பம் கட்ட வேண்டும். இந்த லஞ்ச பணத்தை வசூல் செய்து, மேலிடத்துக்கு கொடுக்க, கோவை புறநகரில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பெட்டியை திறந்தே வைத்துள்ளனர். இவர்களது கையில் நிறைய பணம் புரள்வதால், கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் போடும் ஆட்டம் தலைகீழாக உள்ளது. மேலிடத்துக்கு கொடுத்தது போக, மீதியை அமுக்கி, பல கோடி ரூபாய் சுருட்டி விட்டனர். மேலதிகாரிகள் கேட்டால், கட்சி - காக்கி என இரு தலைமைக்கும் கொடுக்கனும் சார்.. என அள்ளிவிடுகிறார்கள். இதுமட்டுமின்றி, கஞ்சா விற்பனை, மணல் கொள்ளை, டாஸ்மாக் பார் என பல வகைகளில் தனியாக கரன்சி குவித்து விடுகிறார்கள். அப்படி போடு... போடு...ன்னு இவர்கள் ஆட்டம் தாங்கல...!

3 ஸ்டார் பணியிடங்கள் காலி... காக்கிகள் ஜாலி....


திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பல மாதங்களாக இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். தற்போது அவரும் பணியிடமாற்றத்தில் சென்று விட்டதால் அங்கு பணியாற்றி வரும் காக்கிகள் ஜாலியாக வேலை(!) செய்கிறார்களாம். நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு போலீஸ் நிலையங்களிலும் இன்ஸ்பெக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதால் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுதான் நேரம் என்று நினைத்து காவல் நிலையத்திற்கு வரும் புகார்கள் மீது தங்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்களாம். 3 ஸ்டார் பணியிடங்கள் காலி, நம்ம வாழ்க்கை ஜாலி என்று இன்ஸ்பெக்டர்களின் டார்ச்சர் எதுவும் இல்லாமல் குதூகலமாக வாழ்ந்து வருகிறார்களாம். இதனை அறிந்த மற்ற காக்கிகள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களாம்.

மாமூலுக்கு வேட்டு வைத்ததால் கடுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனமகிழ் மன்றங்களும், மசாஜ் சென்டர்களும் அதிகரித்து வருவதால் போலீசார் படு குஷியாக உள்ளார்களாம். மாதந்தோறும் எதிர்பார்க்காத வகையில் மாமூல் கொட்டி வருகிறதாம். இதனால் சில மனமகிழ் மன்றங்களில் நடக்கும் கூத்துகளை போலீசார் கண்டு கொள்வதில்லையாம். போலீசுக்கு யார் அதிக மாமூல் கொடுப்பது என்பதில் தான் மனமகிழ் மன்றங்களும், மசாஜ் சென்டர்களும் போட்டி போடும் நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கன்னியாகுமரியில் மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதாக நேரடியாக எஸ்.பி.க்கே சிலர் புகார் கூறி உள்ளனர். உள்ளூர் போலீசுக்கு தெரியாமல் தனிப்படையை அனுப்பி மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்த எஸ்.பி. உத்தரவு போட்டு உள்ளார். இவ்வாறு சிக்கிய மசாஜ் சென்டர்கள், மாதந்தோறும் போலீசை நன்கு கவனித்து வந்தவைகள் ஆகும். மாமூல் கொடுத்தவர்கள் மாட்டிக் கொண்டார்களே என்று சில போலீசார் நொந்து போனார்களாம். அதுவும் ஒரு சிலருக்கு கடந்த சில மாதங்களாக தான் கவனிப்பு வந்துள்ளது. அதற்குள் இப்படி செக் வைத்து விட்டார்களே என்று வேதனையின் உச்சக்கட்டத்துக்கே போய் விட்டார்கள். இதனால் இந்த விவகாரத்தில் கைதானவர்களின் விபரங்களை கூட பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்காமல் மவுனம் காத்து உள்ளனர். அது மட்டுமில்லாமல் ரெய்டு போன தனிப்படையினர் மீதும் கடுப்பாக உள்ளார்களாம். எஸ்.பி.க்கு யார் புகார் மனு அனுப்பி இருப்பார்கள் என்று ரகசியமாக விசாரிப்பும் நடக்கிறதாம்.

நீ உள்ளே போடு..., நான் வெளியே விடுறேன்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி குதிரையாற்று பகுதியில் ஆற்று மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்று மணல் எடுக்க தமிழக அரசு தடை விதித்துள்ள போதிலும் இங்கு அத்துமீறல் தொடர்கிறது. இங்குள்ள செக்போஸ்ட் வழியாகவும், குமரலிங்கம் சாலையில் உள்ள காவல் நிலையம் வழியாகவும் லாரிகளில் மணல் கடத்தல் 24 மணி நேரமும் ஜோராக நடக்கிறது. ஆனால், இதை போலீசார் கண்டுகொள்வதில்லை. காரணம், பலத்த கவனிப்பு. மணல் கடத்தல் லாரிகளை போலீசாரே கிரின் சிக்னல் போட்டு அனுப்பி வைக்கின்றனர். ‘’நீ உள்ளே போட்டால், நான் வெளியே பத்திரமாக அனுப்புவேன்...’’ என ஒப்பந்தம் போட்டு, போலீசார் செயல்படுகின்றனர்.  அமராவதி வனச்சரகம் நவ்வால் ஓடை  பகுதியிலும் மணல் கொள்ளை சூப்பராக நடக்கிறது. இதில், போலீசுக்கு துணையாக, வனத்துறையும், வருவாய்த்துறையும் களம் இறங்கியுள்ளது வேதனையிலும் வேதனை...!

Tags : Put that ... Put ... Atom bangle ...!
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...