×

இடமாற்றமா...? சஸ்பெண்டா...இன்ஸ்பெக்டரை எச்சரித்த ஐ.ஜி

புதுவை போக்குவரத்து துறையில் கோலாச்சிய இன்ஸ்பெக்டர் மீது அடுக்கடுக்கான புகார் குவிந்தது. அவர், மருத்துவ மாணவர்கள், சுற்றுலா பயணிகளிடம் கெடுபிடியாக நடந்து கொண்டு வசூலில் கொடிகட்டி பறந்தார். இவரால் புதுவை அரசுக்கு கெட்ட பெயர் வந்தது. இவர் மீது மற்ற போலீஸ் அதிகாரிகளும் வெறுப்பாக இருந்தனர். புகார் மீது ரகசிய விசாரணை நடத்தி உண்மை என தெரியவந்ததால் ஐஜி சுரேந்திர சிங் யாதவ், இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றினார். இதனையறிந்த அவரது ஆதரவு எம்எல்ஏ தனது சகாக்களுடன் ஐஜியிடம் சென்று மல்லுக்கட்டினர். இன்ஸ்பெக்டரை வேறு ஒரு காவல்நிலையத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கூறினார். ஒருகட்டத்தில் கடுப்பான ஐஜி, நீங்கள் கிளம்புறீங்களா அல்லது இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்யட்டுமா? என்றார் கடுப்பாக. அதிர்ந்துபோன அந்த எம்எல்ஏ, தனது சகாக்களுடன் அலறியடித்து கொண்டு, வந்த வேகத்துக்கு வீடு திரும்பினர். இந்நிலையில் சமீபத்தில் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள 20 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் இன்ஸ்பெக்டருக்கு கண்ட்ரோல் ரூம்தான் கிடைத்தது. ஆயுதப்படை என்றாலும் கொஞ்சம் மரியாதையாக இருக்கும். எம்எல்ஏ வந்ததால் கண்ட்ரோல் ரூம் கிடைத்துவிட்டதே என சக போலீசாரிடம் அவர் குமுறி வருகின்றார்.

‘மட்டன் வசூல் வேட்டையில் மதுரைக்கார காக்கிகள் கலக்கல்’

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நகர் போக்குவரத்து பிரிவு, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த இரு பிரிவு காவல் நிலையங்களுக்கும் தனித்தனி இன்ஸ்பெக்டர்களுடன், மொத்தமாக 22 போலீசார் பணியில் உள்ளனர். சமீபத்தில் திருமங்கலத்தில் இருக்கும் வேன் ஸ்டாண்ட்களை அணுகிய 2 பேர், 2 காவல் நிலையங்களிலும் ஒரு போலீசுக்கு தலா 2 கிலோ ஆட்டிறைச்சி எனக் கணக்கிட்டு, மொத்தம் 44 கிலோ ஆட்டிறைச்சிப் பொட்டலங்களை வாங்கித்தரச் சொல்லி, பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், எந்த போலீசுக்கும் ஆட்டிறைச்சி போய்ச் சேரவில்லையாம்.

தற்போது வேன் டிரைவர் ஒருவர் இந்த இறைச்சி மேட்டரை ‘ஓபன்’ பண்ண, போலீசார் டென்ஷன் ஆயிட்டாங்களாம். உடனே இரு காவல் நிலைய போலீசார், வேன் ஸ்டாண்ட் டிரைவர்களிடம், யாரந்த 2 பேர் என விசாரணை நடத்தினார்களாம். இதில், இருவருமே போலீஸ் டிரைவர்கள் என தெரிய வந்ததாம். இந்த ‘ஆட்டிறைச்சி வசூல்’ குறித்து, மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கும் தகவல் சொல்லி உள்ளனராம்.

அதிகாரிகளை தலை சுற்றவைத்த எஸ்.எஸ்.ஐயின் கல்லா பட்டியல்


மாங்கனி மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் போலீசார் கல்லா கட்டுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதில் தீவட்டிப்பட்டி ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ. ஒருவர், கல்லா கட்டுவதை பட்டியலிட்டு சக போலீசார், புகார் தட்டி விட்டிருப்பது அதிகாரிகளை தலைசுற்ற வச்சிருக்காம். 50 சந்துக்கடைகளுக்கு மாதம் 2ஆயிரம் வீதம் 1லட்சம், 3 சீட்டு லாட்டரிக்கு 17 பஞ்சாயத்துகளில் 48 பேரிடம் தலா 2500 வீதம் 1.20 லட்சம், செம்மண் கடத்தலுக்கு 10லாரிகள், 15 டிராக்டர் உரிமையாளர்களிடம் தலா 1000 வீதம் 25ஆயிரம், போலி டாக்டர்கள் 4பேரிடம் தலா 2ஆயிரம் வீதம் மாதம் ₹8ஆயிரம், 4 தாபாக்களில் 2500 வீதம் 10ஆயிரம் என்று இவரது வசூல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறதாம். இதேபோல் காய்கறி, இறைச்சி, அரிசி, பழங்கள் என்று எங்கு பார்த்தாலும் ஆட்டைய போடுவதிலும் அய்யா கில்லாடியாம். இதில் ஸ்டேஷன் இன்ஸ்சுக்கென்று தனியாக ஒரு நோட்டு போட்டு வசூலிப்பது தனிக்கதை. சரி, இப்படி கல்லா கட்டுபவரை ஒன்றும் செய்ய முடியாதா? என்று கேட்டால், அதற்கும் ஒரு டுவிஸ்ட் இருக்காம். முக்கிய பிரமுகர் வீட்டில் இவரது நெருங்கிய நண்பர், உதவியாளராம். அதை காரணமாக வைத்தே எல்லா காரியத்தையும் சாதிக்கிறார் இந்த எஸ்.எஸ்.ஐ. என்கிறார்கள்.

மாமூலில் புரளும் இன்ஸ்பெக்டர்.... காக்கிகள் புலம்பல்

மலைக்கோட்டை மாவட்ட பகுதியான திண்டுக்கல் சாலையையொட்டி உள்ள காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மாமூலில் திளைத்து வருகிறார். கஞ்சா வியாபாரம் நடப்பதை கண்டு கொள்ளாமல் இருக்க ஆறுபடைக்கு சொந்தக்காரர் பெயரை கொண்ட கஞ்சா வியாபாரி லட்சக்கணக்கில் கல்லா கட்டி வருகிறார். இதனால் கஞ்சா வியாபாரத்தை கண்டு கொள்ளாமல் அந்த இன்ஸ்பெக்டர் இருந்து வருகிறார். இவருக்கே மாமூல் வழங்கப்படுவதால் கஞ்சா வியாபாரம் தடுப்பது பற்றி எப்படி புகார் அளிப்பதுன்னு தெரியாமல் காவல்நிலைய காக்கிகள் புலம்பி வருகின்றனர்.



Tags : IG ,Suspenda ,Inspector Transfer ,Inspector , Transfer ...? Suspenda ... IG who warned the Inspector
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...