×

வருகிறது பவர்புல் எலெக்ட்ரிக் கார்கள்

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னோடி நிறுவனமாக மஹிந்திரா விளங்குகிறது. எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு வெகுவாக உயர்ந்து வரும் இவ்வேளையில், தனது சந்தையை வலுப்படுத்தும் முயற்சிகளை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, 4 புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல்களை அடுத்த வாரம் துவக்க உள்ளது. மஹிந்திரா கேயூவி100, எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி500 அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட் மாடல்களும், குவாட்ரி சைக்கிள் ரகத்திலான மின்சார வாகனமும் வர இருக்கின்றன.

மற்றொரு மாடல் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது, மஹிந்திரா நிறுவனம் அதிக செயல்திறன்மிக்க எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலையும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருக்கிறது. இப்புதிய எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மஹிந்திரா பன்ஸ்டர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த அதிசெயல்திறன் மிக்க மின்சார காரில் 60 kWh பேட்டரி பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த கார், அதிகபட்சமாக 308 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன், 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்திறன்மிக்க கார் மாடலை உருவாக்குவதற்கான அடிப்படை மாடலாக புதிய பிளாட்பார்மில் இந்த கான்செப்ட் கார் மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த கான்செப்ட் அடிப்படையில் புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டால், அது இந்திய சந்தையில் மிக சக்தி வாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக இருக்கும்.

இதனிடையே, மஹிந்திரா கேயூவி 100 எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார், தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மாடலை முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் மஹிந்திரா திட்டம் வைத்துள்ளது. அடுத்த ஆண்டு எக்ஸ்யூவி 300 அடிப்படையிலான மின்சார காரும், அதைத்தொடர்ந்து எக்ஸ்யூவி 500 அடிப்படையிலான மின்சார காரும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Powerful electric cars
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்