×

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு

* அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் 4 நாட்கள் ஆலோசனை

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை முதல் 4 நாட்கள் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்று வருகிற 16ம் தேதியுடன் (ஞாயிறு) 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டியநிலை உள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தாலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கணிசமாக வெற்றிகளை பெற்றுள்ளதாகவே அதிமுகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கருத்து தெரிவித்து வருவதால் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாஜவுக்கு எதிராக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருவது, கூட்டணியில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. அதேபோன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மூத்த அமைச்சர்களே கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார். அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக  அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் பேசக்கூடாது என்றும், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 14ம் தேதி (வெள்ளி) தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீது விவாதம் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 24ம் தேதி முதல் துறை வாரியான மானிய கோரிக்கை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த கூட்டம் ஒரு மாதம் நடைபெறலாம். அதன்படி, வருகிற 14ம் தேதி முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டம் மார்ச் மாதம் கடைசி வாரம் வரை நடைபெற வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த, அனைத்து மாவட்டங்களை சேர்ந்த அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கும் கூட்டம் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை (திங்கள்) முதல் 13ம் தேதி (வியாழன்) வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் இரண்டு கட்டங்களாக கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.

அதன்படி, நாளை (திங்கள்) காலை கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4.30 மணிக்கு மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும். நாளை மறுதினம் (11ம் தேதி) காலை திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் மாலையில் கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்கள், 12ம் தேதி காலை தேனி, அரியலூர், தர்மபுரி, கோவை, திருப்பூர் மற்றும் மாலையில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்கள் 13ம் தேதி காலை திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் மாலையில் விழுப்புரம், வடசென்னை, தென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அதிமுக கட்சி தலைமை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

பகுதி செயலாளர்களுக்கும் அழைப்பு

அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக வளர்ச்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (10ம் தேதி) முதல் 13ம் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலையில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய கழக செயலாளர்களும், நகர செயலாளர்கள், மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி செயலாளர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : budget session ,elections ,government ,city government ,Tamil Nadu ,Nadu , budget session ,Tamil Nadu government, hold elections, city government
× RELATED மக்களவை தேர்தல் நேரத்தில் ரூ.1.65 லட்சம்...