×

பொருளாதாரச் சீரழிவில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் கொடுமைகளை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: பொருளாதாரச் சீரழிவு, நசிந்து வரும் வேளாண்மை, பெருகி வரும் வேலையின்மை ஆகிய அலங்கோலங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே, சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என்ற கொடுமைகளை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திருவள்ளூர் நகராட்சி, காமராஜர் சிலை அருகே நேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் பெறும் இயக்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றார். அப்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கத்தை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிலர் அரசியல் நோக்கத்தோடு, காழ்ப்புணர்ச்சியோடு, இதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ அரசு 3 கொடுமையான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்து, ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துவதற்காக ஒரு சதித்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

நாட்டைப் பிளவுபடுத்தி, மக்களைக் கொடுமைப்படுத்தும் வகையில், குறிப்பாகச் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கி இருக்கும் ஈழத்தமிழர்கள் ஆகியோரைக் கொடுமைப்படுத்தும் இந்தச் சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் துன்பத்தை, கொடுமைகளை, அவர்களது ஆட்சியின் அலங்கோலங்களை மக்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்காகவே இந்தக் கொடுமையை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். நாட்டில் நிலவும் முக்கியமான 3 பிரச்சனைகள்-பொருளாதாரம் மிக கீழ்நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது; விவசாயிகள் பல கொடுமைகளுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு வேளாண்மைத்துறை நசிந்து வருகிறது; பட்டதாரிகள், இளைஞர்கள் வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்த 3 பிரச்னைகளையும் மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். அதில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே சிஏஏ, என்ஆர்சி. என்பிஆர் போன்ற சட்டங்களைக் கொண்டுவந்து, மத்திய அரசு ஒரு சதித்திட்டத்தை உருவாக்கி இத்தகைய நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

எனவே மத்திய அரசுக்கு எதிராக திமுக மட்டுமின்றி, நம்முடன் கூட்டணியில் இருக்கும் பல்வேறு கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அண்ணா அறிவாலயத்தில் ஒன்றுகூடி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதன்படி, கடந்த 2ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் தமிழகம் முழுவதும் , மாவட்டத் தலைநகரங்கள், ஒன்றியங்கள், நகரங்கள், கிராமங்களில், பட்டி தொட்டிகளில் வீடு வீடாகச் சென்று, அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களையும் சந்தித்து, கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்தப் படிவங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இன்னும் சில நாட்களில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பது என முடிவு செய்தோம். ஒரு  கோடி பேரிடம் கையெழுத்துப் பெறவேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பணியைத் தொடங்கினோம். நேற்றைய கணக்கின்படி கையெழுத்து 2 கோடியைத் தாண்டிவிட்டது.

ஏற்கனவே நம்முடைய தலைவர் கலைஞர், 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி, கையெழுத்துகளைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கே அனுப்பி வைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் என்பது வரலாறு. ஆகவே, ஈழத் தமிழர்களுக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டு நடைமுறையை உடனடியாக இந்த அரசு நிறுத்தி வைக்க வேண்டும்; குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில்தான் இந்தக் கையெழுத்து இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டம் இத்துடன் முடிவடையும் போராட்டம் அல்ல, தொடரும் போராட்டம். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி நாசர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிடபக்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், முஸ்லிம் லீக் காயல் அகமது சாலிக், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



Tags : NPR ,NRC ,Central Government ,CAA ,public ,downturn ,MK Stalin , CAA, NRC ,NPR,atrocities , divert public attention
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....