×

ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய விவகாரம் மொபைல் நிறுவனத்தின் மேல்முறையீடு தள்ளுபடி : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏர்டெல் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக தொழில் செய்துவருபவர் வி.எஸ்.சுரேஷ். இவர் ஏர்டெல் மொபைல் போன் சேவையை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், இவரது செல்போனுக்கு பல்வேறு ஆபாச பதிவுகள் வந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திற்கு புகார் அளித்தார். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அவர் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாததால், தனது புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஏர்டெல் நிறுவனத்தின் மீது சைபர் கிரைம் போலீசார் 292 (ஆபாச தகவல் அனுப்புதல்), 294 (ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துதல்) உள்ளிட்ட இந்திய தண்டனை சட்ட பிரிவுகளிலும், பெண்களுக்கு எதிரான மரியாதை குறைவாக செயல்படுதல் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, ஏர்டெல் நிறுவன பிரதிநிதி ஆஜராகுமாறு எழும்பூர் தலைமை பெருநகர நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

இதை எதிர்த்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்டெல் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ஏர்டெல் நிறுவனம் வெறும் சேவை நிறுவனம் மட்டுமே. புகார் கொடுத்தவர் கூறிய குற்றச்சாட்டுகள் சேவை நிறுவனத்திற்கு பொருந்தாது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவும் செய்ய முடியாது என்று வாதிட்டார்.அரசு வக்கீல் வாதிடும்போது, புகாரின் மீது விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் புகாரில் முகாந்திரம் உள்ளதாக அறிந்து அதன் அடிப்படையிலேயே குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர் என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 2013 முதல் நிலுவையில் உள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பில்தான் முடிவு தெரியும். இந்த நிலையில் அதில் இந்த நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கு 4 மாதங்களில் விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : company ,affair ,Mobile , Mobile company's appeal ,dismissed ,affair sent by pornographic text
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...