×

நீண்ட நாட்களாக நடந்து வரும் குந்தா நீர்தேக்க மின் திட்டப்பணி முடிவது எப்போது? : சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: நீண்ட நாட்களாக நடந்து வரும் குந்தா நீர்தேக்க மின் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் 2.90 கோடிக்கும் மேலான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி போன்றவற்றின் மூலமாக உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்வாரியம் விநியோகம் செய்து வருகிறது. இதில் மழைகாலங்களில் நீர் மின்நிலையங்களின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்தகைய மின்நிலையங்கள் கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் மெகாவாட்டிற்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மழைபெய்யும் காலங்களில் 1,500 மெகாவாட்டிற்கும் மேல் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் உயர்ந்து வரும் மின்தேவையினை கருத்தில் கொண்டும், நீர்மின்நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில் நீலகிரியில், குந்தா ஆற்றின் குறுக்கில் நீர்தேக்க மின்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. நான்கு பிரிவுகளில் தலா 125 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில், மொத்தம் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இத்திட்டம் கடந்த 2008ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் திட்டப் பணிகள் 2013ம் ஆண்டில் துவங்கப்பட்டது. தற்போது குந்தா  பணியானது ரூ.1,831 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதலாம் தொகுதியில் அணுகு சுரங்கம், கம்பி வடம் மற்றும் காற்றோட்ட சுரங்கம் ஆகியவை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. மேலும் கடைவாய் பகுதி பொங்குகிணற்றுக்கான கூடுதல் நுழைவாய் சுரங்கம், கடைவாய் சுரங்கத்திற்கான கூடுதல் நுழைவாய் சுரங்கம், மின்நிலைய மேல் பகுதிக்கான கூடுதல் நுழைவாய் சுரங்கம், நீர் அழுத்த குழாயின் அடிப்பகுதிக்கு செல்வதற்கான கூடுதல் நுழைவாய் சுரங்கம், பாறைகளின் தன்மை அறியும் சோதனைகள் போன்றவை முடிவடைந்துள்ளது. இதேபோல் இரண்டாம் தொகுதியில் தலைவாய் சுரங்கத்திற்கான கூடுதல் நுழைவாய் சுரங்க வாயில் தோண்டும் பணி, தலைவாயில் பொங்குகிணறு அமையவுள்ள தளம் சமன்படுத்தும் பணி மற்றும் மின்சாரத்தால் இயக்கப்படும் பளு தூக்கி நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளது. மீதம் உள்ள பணிகள் வேகமாக நடந்து வருகிறது. குறிப்பாக மின்மாற்றி குகையில் தோண்டும் பணி, கடைவாயில் சுரங்கம் மற்றும் கடைவாயில் ெபாங்கு கிணறு பணிகள் வேகமாக நடக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தின் மின்தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக நடந்து வரும் குந்தா நீர்தேக்க மின்திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : activists , long-running, Kunda Hydroelectric Project,completed
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...