×

நெடுஞ்சாலைத்துறை கோட்டகணக்கர் பணிக்கு லஞ்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சிபெற்ற 42 கண்காணிப்பாளர்கள்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் கோட்டகணக்கர்களாக லஞ்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்று, பதவி உயர்வு பெற்ற 42 கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அந்த துறை தலைமை மவுனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 62,468 கி.மீ நீள சாலைகள் உள்ளது.  இந்த சாலை பணிகளை செயலாக்கம் செய்ய 8 பிரிவுகளை கொண்ட 100 கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பட்டியல்களைச் சரிபார்ப்பது, கோட்ட அளவில் கணக்குகளைத் தயாரிப்பது போன்ற பணிகளைக் கவனிக்க ஒவ்வொரு கோட்டத்திலும் கோட்டக் கணக்கர்கள் பதவி உள்ளது. கடந்த ஜூன் 2016, டிசம்பர் 2017ல் தேர்வு நடத்தி, 42க்கும் மேற்பட்டோர் கோட்ட கணக்கு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், 5 லட்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்று, அந்த பொறுப்பில் கோட்டக்கணக்கராக பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள், நெடுஞ்சாலைத்துறையில் விதிமீறல்கள், நிதி முறைகேடு, ஒப்பந்ததாரர்களுக்கு அதிகப் பணப் பட்டுவாடா போன்ற தவறுகள் நடப்பதற்கு, அவர்கள் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக தார் விலை ஊழலில் ஒப்பந்ததாரர்களுக்கு 1000 கோடிக்கு மேல் பணப்பட்டுவாடா செய்து இருப்பதாக தெரியவந்தது.

இது ெதாடர்பாக எழுந்த புகாரின் பேரில், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் கோதண்டராமன் 8 பேரை கண்காணிப்பாளர்களாக பதவியிறக்கம் செய்து உத்தரவிட்டார். அதே நேரத்தில், முறைகேடாக தேர்ச்சி பெற்ற 34 பேர் தற்போது வரை கோட்டக்கணக்கர்களாக பணியாற்றி வருகின்றனர்.தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடாக பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் அந்தந்த துறை உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரத்தில் நெடுஞ்சாலைத்துறையில் முறைகேடாக லஞ்சம் கொடுத்து கோட்டக்கணக்கர்களாக தேர்ச்சி பெற்று, பதவி உயர்வு பெற்றவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அவர்களில் 8 பேர் பதவியிறக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ள நிலையில், 34 பேர் கோட்டக்கணக்கர்களாக தொடர்ந்து அதே பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நெடுஞ்சாலைத்துறையில் தற்போது நடந்து வரும் விதிமீறல்களை தடுக்க முடியாமல் போய்விட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.


Tags : Superintendents ,Highway Department 42 Bribery and Corruption Examination , 42 Superintendents , Bribery ,Corruption Examination
× RELATED புத்தாண்டு பாதுகாப்பில் ஆயிரம் போலீசார்: மாவட்ட எஸ்பி தகவல்