×

நாடே பரபரப்புடன் எதிர்பார்க்கும் டெல்லி தேர்தலில் 62% வாக்குப்பதிவு: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அத்வானி, சோனியா, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆர்வமுடன் பரபரப்பாக  எதிர்பார்க்கும் டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 62 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ மூத்த தலைவர் அத்வானி, முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். டெல்லி சட்டசபை ஆயுட்காலம் இந்த மாதம் 22ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை ஜனவரி 6ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதற்கான வேட்புமனு ஜனவரி 14ல் தொடங்கியது. 21ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. பரிசீலனைக்கு பின்னர் 79 பெண் மற்றும் 593 ஆண் என 672 வேட்பாளர்களின் மனுக்கள் போட்டிக்கு தகுதியானவை என தேர்தல் ஆணையம் 24ம் தேதி அறிவித்தது. இதையடுத்து பிரசாரம் சூடுபிடித்தது.

தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. அதில் ஆம் ஆத்மி கட்சியில் மட்டுமே மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பாஜ கூட்டணியில் அக்கட்சி 66 இடத்தில் போட்டியிட்டது.  4 இடங்கள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளில் போட்டியிட்டது. லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி சார்பிலும் 68 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 3வது முறையாக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து  முதல்வர் கெஜ்ரிவால் தீவிர பிரசார களத்தில் இறங்கினார். அவருக்கு போட்டியாக பா.ஜவும் களமிறங்கியது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் 70 மத்திய அமைச்சர்கள், 240 பா.ஜ எம்பிக்கள், பா.ஜ கூட்டணி முதல்வர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பா.ஜவுக்கு ஆதரவாக வீதிவீதியாக, வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் கடைசி கட்டத்தில் 2 நாள் பிரசாரம் மேற்கொண்டனர். பிப்ரவரி 6ம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை சரியாக 8.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஓட்டு போடுவதற்காக பல தொகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் திரண்டு வந்திருந்தனர். முதல் ஒரு மணி நேரத்தில் 3.66 சதவீதம் பதிவானது. அதன்பின்னர் மதியம் வரை ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது. பிற்பகலில் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது. பொதுமக்கள் நீண்டவரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவரது மனைவி சவீதா இருவரும் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திரபிரசாத் கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் காலை 10 மணிக்கு சென்று வாக்களித்தனர். பெற்றோரிடம் ஆசி பெற்ற பின்னர் சிவில்  லைன்ஸ் பகுதியில் ராஜ்புரா போக்குவரத்து நிறுவன வாக்குச்சாவடியில் ஆம்  ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்  தனது மனைவி சுனிதா மகன் புல்கிட் ஆகியோருடன் வந்து வாக்களித்துச் சென்றார். டெல்லி துணை முதல்வர் சிசோடியா தனது குடும்பத்துடன் சென்று பந்தவநகரில் உள்ள எம்சிடி பள்ளியில் வாக்களித்தார். பா.ஜ மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அவுரங்கசீப் லேன் ஓட்டுச்சாவடியிலும்,

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நிர்மான்பவன் ஓட்டுச்சாவடியிலும், பிரியங்காகாந்தி தனதுகுடும்பத்துடன் லோதி எஸ்டேட் பகுதியிலும் வாக்களித்தனர். மேற்கு டெல்லி எம்.பி பர்வேஷ் வர்மா, பாஜ மாநில தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரும் காலையிலேயே ஜனநாயக கடமை ஆற்றினர். முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பாஜ தேசிய செயலாளர் ராம் லால் ஆகியோர் நிர்மான் பவனுக்கு முதலில் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர். டெல்லி கவர்னர் அனில்பைஜால் தனது மனைவி மாலாவுடன் சென்று கிரேட்டர் கைலாஷ் பூத்தில் வாக்களித்தார். இதே போல் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், பா.ஜ எம்பி காம்பீர், நடிகை டாப்ஸி ஆகியோரும் குடும்பத்துடன் வாக்களித்தனர். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் துக்ளக் கிரசன்ட் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி காலை 8 மணிக்கு வாக்களித்தார். இதே போல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புதுடெல்லி தொகுதிக்குட்பட்ட காமராஜ் லேன் பகுதியில் வாக்குப்பதிவு செய்தார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ்காரத் தனது வாக்கினை சாஞ்சார்பவன் பூத்தில் செலுத்தினார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் ஷாகீன்பாக், ஜமியா மிலியா பகுதியில் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து ஓட்டுபோட்டனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. 6 மணிக்கு முன்பு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் இருந்து இவிஎம், விவிபிடி மெஷின்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.

அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் இருந்தும் சரியான தகவல்கள் கிடைக்கப் பெற்ற பின்னர், மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 58 சதவீதம் வாக்கு பதிவானதாக மாநில தேர்தல் தலைமை ஆணையர் ரன்பீர் சிங் தெரிவித்தார். வாக்குகள் நாளை மறுநாள்(11ம்தேதி) எண்ணப்படுகின்றன. அப்போது டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரியவரும்.

Tags : Ramnath Govind ,Sonia ,Kejriwal ,election ,Delhi ,Advani , Delhi election, polling
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...