×

கேரளாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது: வீடு, மருத்துவமனை என 3,015 பேர் தீவிர கண்காணிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோட்டில் இன்று மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் திருச்சூர், ஆலப்புழா மற்றும் காசர்கோடு  ஆகிய பகுதிகளை சேர்ந்த சீனாவில் இருந்து திரும்பிய ஒரு மாணவி, 2 மாணவர் உட்பட 3 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்றுவரை கூடுதலாக வேறு யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து கடந்த வாரம் ஏற்படுத்தப்பட்டிருந்த மாநில பேரிடர் அறிவிப்பு நேற்றிரவு வாபஸ் பெறப்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா கூறினார். இந்த நிலையில் இன்று காலை காசர்கோட்டில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உமிழ்நீர் மாதிரி ேசகரிக்கப்பட்டு  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே அந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

இதற்கிடையே இன்று வரை மருத்துவமனை மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3,015 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,953 பேர் வீடுகளிலும், 62 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே விமானங்கள் ஏற்ற மறுத்ததால் சீனாவில் உள்ள கும்மிங் விமான நிலையத்தில் கடந்த சில தினங்களாக தவித்து வந்த கேரளாவை சேர்ந்த 15 மாணவர்கள் நேற்றிரவு 11 மணியளவில் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.  அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எர்ணாகுளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களது உறவினர்களை கூட சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அனைவரது உமிழ்நீர் மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தபிறகே அவர்களை வீடுகளுக்கு அனுப்புவது குறித்து  தீர்மானிக்கப்படும் என மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மாநில பேரிடர் அறிவிப்பு வாபஸ்

திருவனந்தபுரத்தில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கடந்த வாரம் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் புதிதாக யாருக்கும்  வைரஸ் பரவவில்லை. பாதிக்கப்பட்ட 3 பேரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இதையடுத்து மாநில பேரிடர் அறிவிப்பு வாபஸ் பெறப்படுகிறது. மாணவர்கள் கல்வி சுற்றுலா செல்ல பிறப்பிக்கப்பட்டிருந்த தடை படிப்படியாக வாபஸ் பெறப்படும்.  ஆலப்புழாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவருக்கு நடத்தப்பட்ட இரண்டாவது சோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது என்றார்.

Tags : influx ,Kerala , Coronal influx in Kerala rises to 4: 3,015 intensive surveillance
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...