×

மாநிலங்களின் நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும்; பொதுமக்களின் பங்கு வேண்டும் என்பதால் எல்.ஐ.சி. பங்கு விற்பனை...நிர்மலா சீதாராமன் பேட்டி

சென்னை: மாநிலங்கள் ஒத்துழைத்தால் பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில்  மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1ம் தேதிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், சென்னையில் பட்ஜெட் தொடர்பாக வர்த்தகர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது, இந்திய பொருளாதாரம் வலுவாகவும், துடிப்புடனும் உள்ளது. அடிப்படை கட்டமைப்புகள்  வலுவாக உள்ளது. வெளிநாட்டு அன்னிய முதலீடு அதிகளவில் உள்ளது.சிறுகுறு தொழில் செய்பவர்களுடன் நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர். சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு எந்தவித காரணமும் இல்லாமல்,  வங்கிகள் கடன் அளிக்க மறுத்தால், சிறப்பு மையத்திற்கு இமெயில் மூலம் புகார் அளிக்கலாம். இந்த சிறப்பு மையம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். புகாரின் நகலை வங்கி மேலாளருக்கும் அனுப்பி வைக்கலாம். விரைவில்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை மீண்டும் எட்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநிலங்களுக்கான எந்த நிதியையும் பட்ஜெட்டில் குறைக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும், விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும்.  மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரிப்பது போல் மத்திய பட்ஜெட் உள்ளதாக கூறுவது தவறு. மத்திய பட்ஜெட் தொடர்பாக, நாடாளுமனற் கூட்டத்தொடர் நடக்கும்போதே, நிபுணர்களுடன் ஆலோசித்தோம். இந்திய தொழில் வர்த்தக  நிபுணர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். இது புதிய முயற்சி. இதற்கு வரவேற்பு உள்ளது. விவசாயிகளுக்கான நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோலார் பம்ப் திட்டத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார். மேலும், பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கத் திட்டம்; எத்தனை சதவீத  பங்குகள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜி.எஸ்.டி விவகாரத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படவில்லை. தமிழ்நாடு மாநில அரசோடு ஆலோசித்து தான் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அறிவித்ததாகவும்  அவர் தெரிவித்தார். சரஸ்வதி சிந்து சமவெளி என குறிப்பிட்டது குறித்து பட்ஜெட் பதிலுரையில் விளக்கம் அளிக்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். மாநில அரசுகள் ஒத்துழைத்தால் ஜிஎஸ்டி வரியில் பெட்ரோல், டீசல் ஆகியவை  கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : LIC ,States ,public ,Nirmala Sitharaman , States ’arrears will be paid soon; Sale of LIC's stock since it is supposed to have public share ... Interview with Nirmala Sitharaman
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...