×

மீனவர் நலனுக்காக கடலில் மிதவை அமைத்து 5ம் நாளாக மீனவர் தியானம்: போலீசார் அறிவுறுத்தியும் கைவிடவில்லை

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மீனவர் நலனுக்காக மீனவர் கடலில் மிதவை படகில் அமர்ந்து 5வது நாளாக தியானம் இருந்து வருகிறார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் சாகர் கவாச் எனும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, கோடியக்கரை படகுத்துறைக்கு தென் மேற்கே சுமார் 200  மீட்டர் தூர்த்தில் ஒரு மிதவை கடலில் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு வேதாரண்யம் கடலோரக் காவல்படை டிஎஸ்பி குமார், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், மற்றும் போலீசார் ஒரு படகில் அங்கு சென்றனர். அந்த  மிதவை பிளாஸ்டிக் பேரல்களால் செய்யப்பட்டு, அதன் மேல், மூங்கில் மற்றும் தென்னங்கீற்றுகளால் கூரை போடப்பட்டு குடில்போல் அமைக்கப்பட்டிருந்தது.

போலீசார், அதன் உள்ளே சென்று பார்த்தபோது, அதில் ஒருவர் இருப்பது தெரியவந்தது.  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் நாகூரை அடுத்த பட்டினச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர் கலியபெருமாள் (65) என்பது தெரியவந்தது.
மேலும், கடந்த 4 நாட்களாக அந்த மிதவையில் அமர்ந்து, மன அமைதிக்காகவும், மீனவர் நலனுக்காகவும் தியானம் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை உடனடியாக கரைக்குத் திரும்ப கடலோரக் காவல் நிலைய ஆய்வாளர்  ஜோதிமுத்துராமலிங்கம் அறிவுறுத்தினார். ஆனால் அதை ஏற்காது தொடர்ந்து கலியபெருமாள் இன்று 5வது நாளாக தியானம் செய்து வருகிறார்.

Tags : Fisherman ,fishermen ,sea , Fisherman's meditation on 5th day by floating in the sea for fishermen's welfare
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்