முறையாக சீரமைக்கவில்லை ஆங்காங்கே ஒட்டு போடப்பட்டுள்ள என்எச் 47: போக்குவரத்துக்கு கடும் சிரமம்

மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலை 47 பொதுவாக என்எச் 47 என குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கன்னியாகுமரியையும், சேலத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. இதன் நீளம் 650 கிமீ(400 மைல்). இந்நெடுஞ்சாலை கேரளம்  மற்றும் தமிழகம் வழியாக செல்கிறது.மேலும், சேலம், பெருந்துறை, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கிறது.குமரி மாவட்டத்தில் என்எச் 47 மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது. ஆனால் சமீபகாலமாக இந்த சாலை பல இடங்களில் பழுதடைந்து குண்டும், குழியுமாக விளங்கி வருகிறது.

இதனால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுவதோடு, பொதுமக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆளாகி வருகின்றனர். சாலையை செப்பனிட கேட்டும், பல போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்டவர்கள் ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’  கண்மூடி மவுனம் சாதித்து வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகள் உட்பட பல இழப்புகளை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இந்த நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் பழுதடைந்த இடங்களில் ஆங்காங்கே ஒட்டு போடப்பட்டுள்ளது.

இந்த பகுதி சாலையை விட சற்று மேடாக இருப்பதால் வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. வேகமாக செல்ல முடியவில்லை. இதுபோல மேடுபள்ளங்களில் ஏறி இறங்கும்போது ஏற்படும் அதிர்வால் வாகனங்களில் இருப்பவர்கள்  கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.  குறிப்பாக அரசு பஸ்களில் செல்லும் முதியவர்கள், நோயாளிகள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். டப்பா அரசு பஸ்களில் சாதாரண சாலைகளில் செல்வதே சவாலாக உள்ளது. இந்த  நிலையில் இதுபோன்ற மேடுபள்ளங்களில் பஸ்கள் செல்லும்போது அதில் பயணம் செய்யும் அவஸ்தை குறித்து சொல்வதற்கில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி தேசிய நெடுஞ்சாலை என்எச்47ஐ முறையாக சீரமைக்க வேண்டுமென  கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: