×

பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் வலிமையுடன் போராடி வருகிறது: இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடனான சந்திப்பிற்கு பின் பிரதமர் மோடி பேட்டி

புதுடெல்லி: இலங்கை பிரதமராக பொறுப்பேற்றபின், முதல்முறையாக இந்தியா வந்துள்ள மகிந்தா ராஜபக்சே பிரதமர் மோடியை இன்று காலை சந்தித்து பேசினார். இலங்கை அதிபராக இருந்த மகிந்தா ராஜபக்சே தேர்தலில் வெற்றி பெற்று  இலங்கை பிரதமராக கடந்த நவம்பர் 19ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் 5 நாள் சுற்றுப்பயணமாக அவர் இந்தியா வந்துள்ளார். நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  ஆகியோரை சந்தித்தார். இன்று காலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு நாடுகளிடையே பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பு, வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பாக விவாதித்தார். அதுதொடர்பாக வெளியுறவுத்துறை  அமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை பிரதமர் மோடியை பார்க்க வந்தார். அவரை பிரதமர் மோடி டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் நேரில் வந்து வரவேற்றார். இருவருக்குமிடையேயான பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது,  தெற்காசிய பிராந்தியத்தில் வணிகத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதவிர இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, பிரதமர்  மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்ஷே டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவும், இலங்கை நெருங்கிய நட்பு நாடுகள். நமது உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சர்வதேச விவகாரங்கள் குறித்தும், பொருளாதார திட்டங்கள், வர்த்தகம் முதலீடு ஆகியவற்றை  மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம். இலங்கையின் வளர்ச்சிக்கு, இந்தியா தனது பங்களிப்பை செய்துள்ளது.
2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயத்தில் நடந்த தாக்குதல், மனிதநேயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பயங்கரவாதத்தை ஒழிப்பதில், இலங்கை துடிப்பாக உள்ளது.

இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு எதிராக இரு நாடுகளும் வலிமையுடன் போராடி வருகின்றன. பயங்கரவாத்திற்கு எதிரான போரை இன்னும் அதிகரிப்போம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும்  இணைந்து பணியாற்றும் என கூறினார். தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். பாதுகாப்பு, பொருளாதாரம் விசயங்களில்  இருநாடுகளும் ஒத்துழைக்கும் என தெரிவித்தார். மேலும், இலங்கையில் வீட்டு வசதி திட்டங்களுக்கு இந்தியா மேலும் உதவ ராஜபக்ஷே கோரிக்கை விடுத்தார்.

Tags : Modi ,countries ,Rajapakse ,Sri Lankan , Both countries are fighting militarily against terrorism: Prime Minister Modi interviews with Sri Lankan Prime Minister Rajapaksa...
× RELATED பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி...