×

நகர் மற்றும் கிராமங்களில் ரேஷன் கடையில் தரமில்லாத பருப்பு விநியோகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் தரம் இல்லாத பருப்பு விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகாவில் நகர் மற்றும் கிராமங்களில் முழுநேர ரேஷன் கடை, பகுதி நேர ரேஷன் கடை என சுமார் 240க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் உள்ளது. இந்த கடைகள் மூலம், சுமார் ஒரு லட்சத்து 49ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு, பொது விநியோக திட்டத்தின் கீழ் வினியோகம் செய்யப்படும் ரேஷன் பொருட்கள் ஜோதி நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிக கழகத்தில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கிருந்து குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் மாத துவக்கத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும் என்னென்ன பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பு தினமும் அங்குள்ள பலகையில் எழுதப்படுகிறது.

ரேஷன் பொருட்கள் வாங்குவோர், பெரும்பாலானோர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மலிவு விலையில் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் பொருட்களை வாங்க, அதிக கூட்டம் என்று பாராமல் வெகுநேரம் காத்திருக்கின்றனர். அப்படி வரும் மக்களுக்கு சிலநேரம் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதமாக பெரும்பாலான ரேஷன் கடைகளில் பாதி உடைந்த துவரம் பருப்புக்கு பதிலாக, முழுமையாக உள்ள மைசூர் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அந்த பருப்பு தரம் இல்லாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வினியோகம் செய்யாதது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ரேஷன் கார்டு தாரர்கள் பருப்பை வாங்குவதை தவிர்த்துள்ளனர். இதை பயன்படுத்தி துவரம் பருப்பு மூட்டைகளை ஊழியர்கள் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டுக்கு விற்பனை செய்யவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து சிவில்சப்ளை அதிகாரிகள் கூறியதாவது: ‘ரேஷன் கடைகளில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பருப்பு, வெளி மாநில பருப்பு வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளது. சில மாதமாக, துவரம் பருப்பு வரத்து இல்லாததால், அதற்கு மாற்றாக மைசூர் பருப்பு வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும், அதனை பலர் வாங்கி செல்கின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து துவரம் பருப்பு வரத்து துவங்கினால் மட்டுமே, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைத்து, ரேஷன் கார்டுகளுக்கு வினியோகிக்கப்படும்’ அது வரை மைசூர் பருப்பே வழங்கப்படும், என்றனர்.

Tags : villages ,ration shops ,cities ,towns , Pollachi, Ration Shop, Consumer
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு