×

ஒரத்தநாடு வடபாதி கிராமத்தில் அக்னி ஆற்றின் குறுக்கே தடுப்பணை பயனின்றி வீண்: விவசாயிகள் வேதனை

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா நெய்வேலி வடபாதி கிராமத்தில் உள்ள அக்னி ஆற்றின் குறுக்கே தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பாக சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை விவசாயிகளுக்கு பலனளிக்காமல் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்ய கோரியும் சமூகநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தஞ்சை கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா திருவோணம் ஒன்றிய பகுதியை சேர்ந்த நெய்வேலி வடபாதி அக்னி ஆற்றின் குறுக்கே சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த அணையானது நெய்வேலி வடபாதி கிராம மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், நெய்வேலி வடபாதி பெரிய ஏரி, நெய்வேலி தென்பாதி கினியகுளம் ஆகியவை பாசன வசதி பெற வேண்டும் என்பது தமிழக அரசின் குறிக்கோளாக இருந்தது. நெய்வேலி பெரிய ஏரி 15 ஏக்கர் பரப்பளவும் 150 ஏக்கர் பாசன பகுதியாகவும் உள்ளது.

அதேபோல் கினியகுளம் சுமார் 23 எக்டேர் பரப்பளவு கொண்டது. இந்த இரண்டு ஏரிகளிலும் இந்த தடுப்பணை தண்ணீர் கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்துவது இயல்பாக நடைபெற வேண்டிய ஒரு திட்டமாகும். ஆனால் மாறாக மேற்கண்ட இரண்டு ஏரிகளும் தூர்வாரப்படாத காரணத்தால் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 500 ஏக்கர் நிலம் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தஞ்சை மாவட்ட கலெக்டர் நேரடியாக தடுப்பணையையும், ஏரியையும் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வாரி தண்ணீரை தேக்கி வைக்க ஏற்பாடு செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக சமூகநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : village ,Vadapathi ,Agni River ,river ,Inaccessible Barrier ,Agni , Tanjore, Neyveli, Public Works Department, Blockchain
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...