×

மின் மயம் திட்டப்பணி நிறைவு: திருவாரூர்- கடலூர் வரை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவாரூர்: திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை வழியாக கடலூர் துறைமுகம் வரையிலான மின்மயம் திட்ட பணி முடிவுற்றுள்ளதையடுத்து இன்று பாதுகாப்பு ஆணையர் தலைமையில் அதி வேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்திய ரயில்வேயில் இன்ஜின்கள் கடந்த காலங்களில் நிலக்கரியை கொண்டு இயக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் இந்த நிலக்கரி இன்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டு இயங்கி வருகின்றன. இருப்பினும் தற்போது ஏற்பட்டு வரும் மாசு மற்றும் செலவுகளை குறைப்பதற்கும் இழுவை திறன்களை அதிகரித்து பயண நேரத்தை குறைத்து பயணிகளுக்கு விரைந்து சேவை செய்யும் வகையிலும் மின்மயம் என்பது தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் ஏற்கனவே சென்னையிலிருந்து விழுப்புரம் வரையில் மின்மயம் இருந்து வருகிறது.

பயணிகளின் கோரிக்கையினை ஏற்று விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம் மற்றும் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக தஞ்சைக்கும் மின்மயம் திட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னக ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருவாரூர் வரையில் 228 கிமீ தூரத்திற்கும் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் வழியாக 56 கிமீ தூரத்திற்கு தஞ்சைக்கும் என மொத்தம் 286 கிமீ தூரத்தில் மின் மயமாக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக ரூ 329 கோடியே 85 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த பணி என்பது விழுப்புரத்திலிருந்து கடலூர் துறைமுகம் வரையில் ஓரு பகுதியாகவும், பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறை வரையில் ஒரு பகுதியாகவும் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரையில் ஒரு பகுதியாகவும் என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த மின் பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் 25ம்தேதி சோதனை ரயில் இன்ஜின் ஓட்டம் நடைபெற்றது. இதையொட்டி இந்த மின் பாதையில் நிரந்திரமாக ரயில் ஓடடம் நடைபெறுவதற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஓப்புதல் வேண்டும் என்பதால் இன்று பாதுகாப்பு ஆணையரின் அதி வேக சோதனை ரயில் ஓட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.30 மணியளவில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார் மற்றும் அலுவலர்கள் இந்த சோதனை ஓட்ட ஆய்வில் ஈடுபடுகின்றனர். மணிக்கு 120 கிமீ வேகம்...இந்த அதிவேக சோதனை ரயில் ஓட்டத்தினையொட்டி பாதுகாப்பு ஆணையர் மற்றும் கோட்ட மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் நேற்று கடலூர் துறைமுகத்தில் இருந்து டீசல் ரயில் இன்ஜின் கொண்டு மயிலாடுதுறை வரையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக ஆய்வு நடத்தினர்.

இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் ரயில் நிலையம் வந்தடைகின்றனர். பின்னர் மதியம் 2 .30 மணி அளவில் மின்சார ரயில் இன்ஜின் கொண்டு அதிவேக சோதனை ரயில் ஓட்டத்தில் ஈடுபடுகின்றனர். மணிக்கு 120 கிமீவேகம் வரையில் இந்த சோதனை ரயில் ஓட்டம் நடைபெறும் என்பதால் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் மற்றும் கடலூர் வரையிலான ரயில் பாதையினை பொதுமக்கள் மிக எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரயில் பாதையில் 25 ஆயிரம் கிலோ வோல்ட் வரையில் மின்சாரம் செல்லக் கூடும் என்பதால் வெறும் கால்களுடன் தண்டவாளங்களை கடக்க வேண்டும் என்பதுடன் இந்த மின் பாதையில் இடையிடையே அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஒயர் பாக்ஸ்களை வெறும் கையால் தொட வேண்டாம் என்பதுடன் அதன் அருகில் சிறுநீர் கூட கழிக்க கூடாது என்றும் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Tags : Cuddalore ,Thiruvarur ,rail test run , Port, Indian Railways, flow, testing, project work
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!