×

கடையம் அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்! 10 ஏக்கரில் நெற்பயிர்கள் நாசம்: விவசாயிகள் கவலை

கடையம்: கடையம் அருகே சிவசைலம் கிராமத்தில் கடனா நதி அணையின் அரசபத்து கால் மூலம் சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் பிசான பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக வயலில் காவலுக்கு இருந்து வருகின்றனர். நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், மலை பகுதிகளில் இருந்து கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து விளைந்துள்ள நெல் மணிகளை தின்று பயிர்களை நாசபடுத்தி வருகின்றன. சுமார் 10 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் நாசம் செய்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அரசபத்துகால் நீர்பாசன கமிட்டி தலைவர் கண்ணன் கூறுகையில், இந்தாண்டு பெய்த பருவமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கரில் நெற்பயிர் நட்டு அறுவடை செய்வதற்கு சுமார் ரூ.27 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்ததால் அறுவடைக்கு தயாராக உள்ள சுமார் 10 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் சேதமடைந்து உள்ளன. காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. வனத்துறை  முழுமையாக சேத நிவாரணம் வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்கு நாய்களை வயலுக்கு காவலுக்கு அழைத்து சென்றால் வனத்துறை அபராதம் விதிக்கிறது. எனவே நாய்களை காவலுக்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி கடையம் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிடுவோம், என்றார்.

Tags : store Planting paddy , Harvesting, Kaduna River, Paddy Cultivation, Harvesting
× RELATED மின் கம்பி அறுந்து 7 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்