×

மணப்பாறை பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்: பொதுமக்கள் வேதனை

மணப்பாறை: மணப்பாறை வட்டாரத்தில் கொளுத்தும் வெயிலால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 5 குடங்கள் வரை தண்ணீர் எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிகளுக்கு இப்போதே பொதுமக்கள் ஆர்டர் செய்வதால், இரும்பு பட்டறை உரிமையாளர்கள் பிஸியாக உள்ளனர். மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய 3 ஒன்றியங்களிலும் இரவில் கடுங்குளிரும், பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், குடிநீர் பஞ்சம் ஆங்காங்கே தலையெடுத்து வருகிறது. ஆகவே, மணப்பாறை பகுதி மக்கள் வெயில் காலத்தை சமாளிக்க இப்போதே இரண்டு சக்கரத்துடன் ஐந்து தண்ணீர் குடங்களை, எரிபொருள் செலவின்றி எளிதாக சுமந்து வரும் சிறிய வாகனமான தண்ணீர் வண்டிகளுக்கு இப்போதே ஆர்டர் செய்துள்ளனர். இதனால், நொச்சிமேடு, தீராம்பட்டி பகுதிகளில் உள்ள இரும்பு பட்டறை உரிமையாளர்கள் இப்பகுதி மக்களின் தேவையை உணர்ந்து ஜன்னல், கதவுகள், உள்பட பிற வெல்டிங் வேலைகளை தவிர்த்து தள்ளுவண்டிகளை தயார் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில், கடும் வறட்சி பகுதியான மணப்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால், குடிநீர் தேடி மக்கள் நீண்ட தூரம் செல்லும் நிலையில் உள்ளனர். தற்போது இப்பகுதி மக்கள் ஆர்டர் செய்துள்ள தள்ளுவண்டிகள் குடங்களை வைப்பதற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன. நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள் ஒரு குடமோ அல்லது அதிகபட்சமாக 2 குடங்களோ தான் தண்ணீர் எடுத்து வர முடியும். அதனால், சிரமங்களை போக்க வரப்பிரசாதமாக இந்த இருசக்கர தள்ளுவண்டிகளை பெண்கள் பெரிதும் நம்பி ஆர்டர் செய்துள்ளனர். வரும் கோடை காலத்தில் தண்ணீருக்கான மக்களின் தேடலில் இந்த மாதிரி தள்ளுவண்டிகள் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் ஐயமில்லை என்கின்றனர் இப்பகுதி குடும்ப தலைவிகள்.

Tags : suffering ,area ,Manapparai , Elderly, Danger, Famine, Drinking Water, Iron Workshop
× RELATED வாட்டி வதைக்கும்...