×

சொர்ண காளீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

காளையார்கோவில்:  காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாயா கோஷத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். காளையார்கோவிலில் உள்ளது பிரசித்தி பெற்ற சொர்ணகாளீஸ்வரர் கோயில். இங்கு சொர்ணகாளீஸ்வரர்- சொர்ணவள்ளி அம்மன், சோமேஸ்வரர்- சௌந்தரநாயகி, சுந்தரேஸ்வரர்- மீனாட்சி ஆகிய மூன்று சிவன், மூன்று அம்பாள் கொண்ட உலக வரலாற்றிலேயே வேறு எங்கும் இல்லாத சிறப்பு வாய்ந்த புண்ணிய ஸ்தலமாகும். இக்கோயிலில் கடந்த ஜன.30ம் தேதி தைப்பூச உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியோன தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் தேரோடும் வீதி வழியாக 2 தேர்கள் பக்தர்கள் புடைசூழ இழுக்கப்பட்டன பெரிய தேரில் சொர்ணகாளீஸ்வரர் காட்சியளிக்க ஆண்களும், சின்ன தேரில் சொர்ணவள்ளி அம்மன் காட்சியளிக்க பெண்களும் இழுத்து வந்தார்கள். ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். தேரோட்ட விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன், ஸ்தாணிகர் சிவ  காளிஸ்வரர் குருக்கள், நகரத்தார்கள், ஏஎல்ஏஆர் அறக்கட்டளை, தி.ராம.தி. குடும்பத்தர்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள் தேர்பவனியில் திருக்கானப்பேர் அன்பர்குழுவினர் தண்ணீர்- சர்பத்தும், ஆன்மீக அன்பர்குழு பேரவையினர் அன்னதானம் ஏற்பாடு செய்திருந்தனர். தேரோட்டத்தில் காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் (பொ) சீராளன் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Devotees ,Surana Kaleeswarar Temple Therota Ceremony Therota Ceremony , Kaliyarikovil, Pilgrims, Sornakaliswarar, festival
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது