×

கமுதி பகுதியில் கண்மாயில் மீன்பிடிக்க கச்சாவலை பின்னும் தொழிலாளர்கள்

சாயல்குடி:  முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதியில் கண்மாய்களில் மீன் கிடப்பதால் அவற்றை பிடிக்க கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கச்சாவலைக்கு வரவேற்பு உள்ளதால், வலை தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளால் கனமழை பெய்யாததால் கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் 28 கண்மாய்கள் ரூ.13.97 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டது. இதனைபோன்று அந்தந்த யூனியன் சார்பில் நூற்றுக்கணக்கான ஊரணி, சிறு கண்மாய்களும் புனரமைப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியது. மாவட்டத்தின் சராசரி மழை அளவான 827 மி.மீட்டரில் 914.25 மி.மீட்டர் மழை பெய்தது. இந்த கனமழையால் 70 சதவீத நீர்நிலைகள் நிரம்பியது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாய், ஊரணிகளில் மீன்களும் வளர்ந்து வருகிறது. மழைகாலத்தில் கிராமபுறங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு வரும் வரத்து கால்வாய்களில் பத்தகட்டை அமைத்து மீன்பிடித்தல், தேங்கிய தண்ணீரில் தூண்டில் போட்டு மீன்பிடித்தலில் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் பருவமழை தொடர்ந்து பெய்யாததால் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு தேவையான தண்ணீரின்றி கண்மாய், ஊரணியில் கிடந்த தண்ணீரை பம்ப்செட்டுகள் மமூலம் அடித்து வந்தனர். இதனால் பெரும்பாலான கிராமங்களில் கண்மாய் தண்ணீர் குறைந்து வருகிறது. தண்ணீர் குறைந்து வருவதால் அதில் கிடக்கும் மீன்களை கச்சாவலை கொண்டு பிடிக்க கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் அனைத்து கிராமத்திலும் கச்சாவலைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இந்த வலையை பின்னும் தொழிலில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து வெங்கலகுறிச்சி பெண் தொழிலாளி ஒருவர் கூறும்போது, ‘மழை காலத்தில் பெருகிய கண்மாய், ஊரணியில் தண்ணீர் குறையும்போது அதிலுள்ள மீன்களை பிடிக்க கிராமங்களிலுள்ள வீடுகள் தோறும் கச்சாவலையை வைத்திருப்பர். கிராமத்தில் மீன்பிடிக்கும் அன்று திருவிழாகோலம் பூண்டு வந்தது. ஆனால் இப்பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கனமழை பெய்யாததால் நீர்நிலைகள் பெருகவில்லை, மீன்களும் வரவில்லை. இதனால் கச்சாவலை பயன்பாடின்றி மாயமாகி போனது. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் முதல் பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருகி கிடக்கிறது. இதில் கெண்டை வகை மீன்கள், கெளுத்தி, உலுவை, வெளுச்சி, அயிரை போன்ற மீன்கள் உள்ளன. தண்ணீர் குறைந்தளவு கிடக்கும் போது அதனை பிடிக்க கச்சாவலை தேவைப்படும்.

கச்சாவலை தயாரிக்க மொச்சி மர குச்சிகள், துணையாக அகத்தி கீரை மர குச்சிகளை வெட்டி வந்து 5 முதல் 7 நாட்கள் காயவைத்து, அதனை வளைத்து, அதில் நூல்கொண்டு வலை பின்னுகிறோம், ஒரு வலை தயாரிக்க குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஆகிறது. இதனால் வலை ஒன்று ரூ.500க்கு விற்கப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கும்போது, தொலைவிற்கேற்ப ரூ.100க்கு மேல் கூடுதல் விலை வைத்து ரூ.600 வரை விற்கிறோம். அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் குறைந்து வருவதால், அதில் கிடக்கும் மீன்களை பிடிக்க இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் வாங்குவதால், கச்சாவலைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் கிராமத்தினர் மற்றும் கடை வியாபாரிகளும் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர்’ என்றனர்.

Tags : Kamuthi ,area , Kamuthi, concert, reception, workers
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...